சுஜாதா
சுஜாதாவும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் தோன்றும் புகைப்படம்.
உடனே, கணினியை இயக்கி, இணையத்தில் மேல்விவரங்களுக்காக நான் தேட முற்பட்டது தேசிகனது இந்த வலைத்தளத்தையே (http://www.desikan.com/).
பெரிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. இலட்சோபலட்சம் சுஜாதா ரசிகர்களில் நானும் ஒருவன். சுஜாதாவிடம் எனக்கு அதிகம் பிடித்தது எல்லோருக்கும் பிடித்த அவரது கதைசொல்லும் முறை; எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் அவரது எழுத்து நடை.
ஒருமுறை எனது கல்லூரியில் 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்' என்ற தலைப்பில் மாணவர்களை எழுதச் சொன்னபோது, நான் சுஜாதாவின் கதைகளைப் பற்றி எழுதலானேன். ஆனந்தவிகடன், குமுதம் பத்திரிக்கையில் தொடர்கதைகளாக வந்த சுஜாதாவின் கதைகளான ப்ரியா, ரத்தம் ஒரே நிறம், கொலையுதிர் காலம், பிரிவோம் சந்திப்போம், வாய்மையே சிலசமயம் வெல்லும், விக்ரம், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ.... என்ற நீண்ட பட்டியலை, அருகில் வந்து எட்டிப்பார்த்த என் ஆசிரியர்.. "தம்பி, சுஜாதாவின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பானது 'கரையெல்லாம் செண்பகப்பூ'. அதை நீ வாசிக்கவில்லையா?" என்று வினவியதோடு நிறுத்தாமல், சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புகளையும், நாடகங்களையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!