பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Saturday, July 28, 2007

ஹாரி பாட்டர் - சச்சின் டெண்டுல்கர்

நேற்று மாலைதான், தோஹா சிடி சென்டர் திரையரங்கில் Harry Porter and the Order of The Phoenix பார்த்தேனா, இன்று காலை இணையத்தில், டெண்டுல்கரின் ஆட்டோகிராபிற்காக வரிசையில் நின்ற ஹாரி பாட்டர் (அதான், டேனியல் ரட்க்ளிஃப்) பற்றிய செய்தியைக் கண்டேன்.


உலகத்திற்கு அவர் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகராக இருக்கலாம்; லட்சோபலட்சம் ரசிகர்கள் இருக்கலாம் அவருக்கு; ஆனால், நமது சச்சின் டெண்டுல்கர் முன்பு அவரும் ஒரு ரசிகர்தான்.... right?! (மேலே நீங்கள் காண்பது, ட்ரெண்ட் ப்ரிட்ஜில் டெஸ்டில் நேற்றய பொழுது - 44ஆவது அரைசதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 11,000 ஓட்டங்கள் எடுத்த சாதனை வீரர் சச்சின் - ரசிகர்களுக்காக ஒரு படம்)

Labels:

Thursday, July 19, 2007

செருப்பு பிஞ்சுறும்இந்த செருப்பு பிஞ்சுடும், இல்லையா?

Monday, July 16, 2007

இணையத்தில் இந்திய மொழிகள்

நேற்று, இணையப் பயன்பாட்டில் ஹிந்தி மொழியினை பலமாக்க அறைகூவல் விடுத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். பலகாலமாகவே, மன்மோகன் சிங், சோனியா, வாஜ்பாய், வி.பி.சிங், முலாயம் உட்பட பல காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் தலைவர்கள், இணணயத்தில் ஹிந்தி மொழியினை அதிகரிப்பதற்கான அரசாங்க உதவி பற்றிப் பேசினாலும், நடைமுறையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்ற விமர்சனம் ஹிந்தி மாநாடுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

நியூயார்க்கில் நடைபெற்ற எட்டாவது உலக ஹிந்தி மாநாட்டிற்காக அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் அவ்வாறு கூறியிருந்தார். யதார்த்த நிலை உணர்ந்துதான் சொன்னாரா அல்லது மாநாட்டுச் சூழலில் ஒப்புக்காகச் சொன்னாரா என்பது ஒரு புறமிருந்தாலும், பொதுவாகவே இணையத்தில் ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளின் பயன்பாடு மிகவும் குறைவாக உள்ளதாகவே தோன்றுகிறது.

அண்மைக்காலத்தில், அரபு மொழி இணையத்தில் முன்னேறி வருவதோடு ஒப்பிட்டால், இந்திய மொழிகள் காணும் முன்னேற்றம் மெச்சத்தகுந்த அளவில் இல்லையென்றே தகவல் தொடர்புச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். இணையத்தில் எந்த அளவிற்கு இந்திய மொழிகள் கோலோச்சுகின்றன என்பதை கீழ்க்காணும் அட்டவணையிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் ஹிந்தி இருக்குமிடம் தெரியவில்லை. உலகிலேயெ இரண்டாவது மக்கட்தொகை கொண்ட நம் நாட்டில் அதிகம் பேர் பேசும் மொழியும் அதிகம் பேர் புரிந்து கொள்ளும் மொழியுமான ஹிந்தி இந்த லிஸ்டில் லேது.

பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் இணையத்தில் ஆங்கிலம் மாத்திரமே சாத்தியமென்று இன்னமும் எண்ணிக்கொண்டிருக்கிறார்களோவென்றே தோன்றுகிறது. ஆங்கில வலைத்தளங்களையும், அங்கில தேடுதல் கருவியையும் மட்டுமே நம்புகின்றனரோ? சரி, எத்தனை பேருடைய கணினிகளில்தான் இந்திய மொழிகளின் எழுத்துரு இருக்கிறது? சென்னை, திருச்சி, விஜயவாடாவில் நான் பார்த்த முக்கால்வாசி ப்ரவுசிங் செண்டரில், சில தமிழ் வலைத்தளங்களை பார்வையிடமுடியாதபடி எழுத்துருப் பிரச்சினை நிலவுகிறது. நான் பணிபுரியும் இடத்திலேயே, கணினியில் தமிழில் டைப் செய்தால், கிராமவாசிகள் ஏதோ ஹெலிகாப்டரை வேடிக்கை பார்ப்பதைப்போல அலுவலகத்தில் உடன்பணிபுரியும் வெள்ளைக்காலர் பணியாளர்கள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாட்டை அதிகரிக்க அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் ஒருபக்கம் இருக்கட்டும், இந்த பிரவுசிங் செண்டர் வைத்திருக்கும் தனியாரும் தாங்களால் இயன்றவற்றைச் செய்யவேண்டாமா? அவ்வாறு உருப்படியாக ஏதாவது செய்தால், சொந்தமாகக் கணினி வசதியில்லாத என்போன்ற பலர் அவ்வப்போது ஆங்கிலத்தில் கிறுக்க வேண்டிய அவசியமும் இருக்காது; ஆங்காங்கே சில சமயங்களில் ஆங்கிலத்தில் பின்னூட்டமிட நேரும்போது யாரும் இனி சாக்குகள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதும் இருக்காது :)

Labels:

Friday, July 13, 2007

தலைவர் படம்

ஒரிஜினல் தமிழனைப் பார்க்கணுமினா யாழ்ப்பாணத்துக்குத்தான் போகணுமின்னு சிவாஜியில் விவேக் டயலாக் வரும். அப்ப தியேட்டரே சும்மா அதிருதுல்ல (இங்கு தோஹாவில்)....அப்பவே தோணிச்சு, நம்மாளுகள விட சிலோன்காரனுவதான் திரையரங்கில் அதிகமின்னு.

நான் பணிபுரியும் இடத்தில் உள்ள மாற்று கம்பெனி ஊழியர் ஒருவர் அண்மைக்காலமாக நமக்கு நண்பரானார். தோஹா சினிமா திரையரங்கில் நான் சிவாஜி படம் விட்டு வெளியே வருகிறேன், இவர் அடுத்த ஆட்டத்திற்கான வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நிற்கிறார். அட.. நம்ப ஆள்... என்று அப்போது ஏற்பட்ட பரிச்சயம்தான். நீங்களும் தமிழ்ன்னு இப்பத்தான் சார் தெரியும் என்றார்.

பணிச்சுமை காரணமாக அலுவலக நேரத்தில் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், டாய்லெட், கேஃப்டீரியா என்று எங்காவது எதேச்சையாக எதிர்பட்டால் ஒரு கணநேர புன்னகையைப் பறிமாறிக்கொள்வதில் குறைவைப்பதில்லை. இப்போது இரண்டு நாட்களாக, குட்டி போட்ட பூனை போல் என்னையே சுற்றி சுற்றி வந்தார். கடைசியில் நேரடியாகக் கேட்டேவிட்டார்... கடன் கேட்கப் போகிறாரோ என்று நினைத்த என் அல்ப புத்திக்கு ஒரு செருப்படி, அல்லது ஒரு இன்ப அதிர்ச்சி. சின்ன கோரிக்கைதான். தலைவர் படத்தை கலர்ல பிரிண்ட் போட்டுத் தருமாறு கேட்டார். கலர் ப்ரிண்டா..? தங்கும் அறையில் ஒட்டிவைத்துக்கொள்ளப் போகிறாராம்.
மன்னிக்கணும் அண்ணே, நான் ரஜினி படத்தையெல்லாம் டெலிட் பண்ணிட்டேன். சும்மா ஒரு இதுக்காக இரண்டு நாள் ஸ்க்ரீன் சேவரா வைத்திருந்தேன், அவ்வளவுதான்...அவர் என்பேச்சைக் கேட்டமாதிரி தெரியவில்லை; அவர் கையில் ஒரு pendrive வைத்திருந்திருந்ததை நானும் தாமதமாகத்தான் கவனித்தேன்.

அவர் கேட்ட படங்களைத்தான் இங்கே upload செய்துள்ளேன்.

Thursday, July 12, 2007

அத்தாழநல்லூர் - அம்பாசமுத்திரம்

உறவினர் அனுப்பிய படங்கள்...அம்பாசமுத்திரம் (Ambasamudram) மற்றும் அத்தாழநல்லூர் (Aththazhanallur) .. திருநெல்வேலி மாவட்டம்.

அத்தாழநல்லூர் - ஆற்றங்கரை, அதனை ஒட்டியிருக்கும் கோயில்....
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான்
வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக்
கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து
சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத்
திருவல்லிக் கேணிக்கண் டேனே.

இது திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை நோக்கிப் பாடிய பாடல். அத்தாழநல்லூர் ஆதிமூலஸ்வாமி (கஜேந்திரவரதர்) கோயில் பாடப்பெற்றத்தலமா என்று எனக்குத் தெரியாது; இந்தக் கோயில் 108 திவ்வியதேசத்தில் அடங்குமா என்பதும், இந்தக் கோயில் பெருமாள், ஆழ்வார் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டிருக்கிறாரா என்பதும் அறியேன். நாங்கள் வைணவ மரபினர் இல்லையெனினும், இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள்தான் எங்கள் குடும்ப தெய்வம்.

Labels: