பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Monday, February 18, 2008

மடிப்பாக்கம் - 25 வருடங்கள் ஓடியாச்சு!

மடிப்பாக்கத்தில் நாங்கள் குடிபெயர்ந்து இன்றோடு (18-பிப்ரவரி) 25வருடங்கள் ஆகிறது.

ஆரம்பத்தில், 1982ல், மடிப்பாக்கத்திற்கு நான் வரத் தயங்கியதற்கு முக்கிய காரணம், அங்கிருந்து என் பள்ளி அதிக தூரம் என்பதாலும்; வீடுகள் மிக அரிதாகத்தான் கண்ணில் தென்பட்டமையால், எனக்கு விளையாட நண்பர்களே கிடைக்கமாட்டார்கள் என்பதாலும். தவிர, முதன்முதலாக எனது அப்பா, நாங்கள் வீடு எழுப்ப திட்டமிட்ட இடத்தை எனக்குக் காட்டியபோது நான் சற்றே ஒரு சிறு அதிர்ச்சிக்குள்ளானேன் - அது ஒரு பெரிய வயல் கிணறாக இருந்து மூடப்பட்ட ஒரு இடம்.. பெரிய பள்ளமாகக் காட்சியளித்த அந்த இடத்திலா நாம் வீடு கட்டிக் குடிபுகப்போகிறோம் என்று எனக்கோ உள்ளூர ஒரு பயம்.

மடிப்பாக்கத்தில் நாங்கள் புதுவீடு கட்டிக்கொண்டு குடிபெயரப்போவது உறுதியான சூழலில் என் அப்பா, ஆறாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னைச் சமாதானப்படுத்த சொன்னது இதுதான் - "இங்கு உனக்கு கிரிக்கெட் விளையாட நிறைய மைதானங்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்; அதனால் நீ கவலைப்பட வேண்டாம்".

உண்மைதான்.. அன்றைய மடிப்பாக்கத்தில் பரவலாகக் காணப்பட்ட vacant plotகள் எல்லாம் எங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏதுவாக அமைந்த அருமையான மைதானங்கள்தான்.

இது ஒருபுறமிருந்தாலும், பாலையா நகரில் நாங்கள் குடிபுகுந்த துவக்க நாட்களில், எங்கள் வீட்டில் (ஏன், எங்கள் ஏரியாவிலேயே கூட) மின்சார வசதி கிடையாது. அதனாலெல்லாம், நானும் ராஜாஜியைப் போல் தெருவிளக்கில்தான் படித்தேன் என்று புருடா எல்லாம் விடமாட்டேன். பள்ளிக்கூடத்தில் நான் குறைவான மதிப்பெண்கள் வாங்கியதற்கு அதுவே ஒரு சாக்காக அமைந்துவிட்டது என்றே சந்தோஷப்பட்டேன். மின்சார வசதி வந்தும்கூட எனது படிப்பின் out of form தொடர்ந்தது வேறு கதை.

அன்றைய நாளில், பாக்கெட் நாவல்களும், மாயாஜால கதை புத்தகங்களும், அம்புலிமாமாக்களும், பாலமித்ராக்களும், இன்ன பிற காமிக்ஸ்களும், Sportstarகளும் பள்ளிக்கூட பாடங்களைவிட அதிக கவனத்தை ஈர்த்த புத்தகங்கள். மாந்தோப்பு, ஏரிக்கரை கிரிக்கெட்டு, முருகன் கோவில் பால்குடம், அம்மன் கோவில் கூழ் ஊற்றுதல், ஐயப்பன் கோவில் அன்னதானம் என்று எதுவாக இருந்தாலும் பனைமர ஏறி நொங்கு திருடித் தின்ற காலத்தில் நமது சந்தோஷங்கள் எல்லாமே ஏரியா நண்பர்களைச் சார்ந்தே இருக்கும்.

மின்சார வசதியில்லாததால், 1983 உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் நேர்முக வர்ணனையை டிரான்ஸிஸ்டரில்தான் கேட்கவாய்த்தது... பின்னாட்களில், தூர்தர்ஷன்தான் எங்களுக்கு கிரிக்கெட்டைப் பார்க்கவும், அதுபற்றி பேசவும், கொஞ்சம் ஹிந்தி கற்றுக் கொள்ளவும் (ச்சார் ரன் கே லியே!) உதவியது. கண்மணிப் பூங்காவில் ஆரம்பித்து வயலும்வாழ்வும், வாழ்க்கைக் கல்வி, செவ்வாய் கிழமை நாடகம், புதன் சித்ரஹார், வெள்ளிக் கிழமை ஒலியும் ஒளியும் என்று தூர்தர்ஷனைத்தான் நாங்கள் தரிசித்துக்கொண்டிருந்தோம். 'ஹம் லோக்' என்ற ஹிந்தித் தொடர் நீங்கலாக ஹிந்தி சமாசாரங்களைக் காண்பதில்லை என்ற கொள்கையோ என்னவோ, தூர்தர்ஷனில் 'தேசிய நிகழ்ச்சிகள்' என்ற ஸ்லைடை காண்பித்தவுடனேயே டிவியை அணணத்துவிடுவோம். அதுசரி, இப்போதும் 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ஸ்லைடைக் காண்பிக்கிறார்களா என்ன? Satellite channelகள் இல்லாத அந்த காலகட்டம், நாம் வாழ்ந்த சமூகத்தில் பரவலாக எல்லா சுற்றத்தாருடனும் குறிப்பாக நம் பள்ளித் தோழர்களுடனும், ஏரியா நண்பர்களுடனும் அதிக நேரத்தைக் கழிக்கவும், மகிழவும் நமக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்திருந்தது.

தேனினும் இனிய குடிதண்ணீர் கிடைத்த ("வாவ்! இதுக்காகவே இங்கே வீடு கட்டணமுங்க!") அந்தக்கால மடிப்பாக்கம் எங்கே... காசு கொடுத்துக் குடிநீர் வாங்கும் சென்னை நகரப் பெருநிழலில் வீழ்ந்துவிட்ட இன்றைய மடிப்பாக்கம் எங்கே?

மடிப்பாக்கம் கூட்டு ரோடு, பொன்னியம்மன் கோவில், கூட்டு ரோட்டிலிருந்து பாதாள விநாயகர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கீத்து கொட்டகையில் அமைந்த தனலஷ்மி திரையரங்கம், பொன்னியம்மன் கோயில் அருகில் உள்ள கோழிப்பண்ணை, மடிப்பாக்கம் ஏரி, அதனருகில் ஐயப்பன் கோவில்.. இவையெல்லாம்தான் அன்றைய மடிப்பாக்கத்தில் பிரச்சித்திபெற்ற landmarkகள்.

சைதாப்பேட்டைக்கும் மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலுக்கும் இடையே ரொம்ப அரிதாக ஷண்டிங் அடித்த M11 என்ற மினி பஸ்தான் மடிப்பாக்கத்தினுள் நுழைந்த முதல் பேருந்து என நினைக்கிறேன். ஒரு ஏரோப்பிளேனை வேடிக்கைப் பார்ப்பது போல, கிரிக்கெட் விளையாடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு பார்ப்போம்; வெகுதொலைவில் பார்த்த அந்தப் பேருந்து, அருகில் வரும்போது உற்று நோக்குவோம்... நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா, இல்லை, நம்ம வீட்டுக்குத்தான் யாராவது வருகிறார்களா என்று எங்கள் எண்ண அலை ஓடும். எப்படியும் பேருந்திலிருந்து ஒரிரு புதியவர்கள் (strangers) இறங்கி ஊருக்குள் அடியெடுத்து வரும்போது எங்களிடம், `தம்பி, இந்த அட்ரஸ் எங்க இருக்கு’ என்று விசாரிக்காமல் செல்லமாட்டார்கள். எங்களுக்குப் புரிந்துவிடும், அவர் சாதாரண ஸ்ட்ரேஞ்சர் அல்லர்; ஏரியாவில் புதிதாகப் பிளாட் வாங்கியவர், அல்லது, வாங்கப்போகுபவர்; எங்களது இந்த யூகம் தொண்ணூரு சதவிதம் சரியாகத்தான் இருக்கும். அப்படி விசாரித்து வந்தவர்கள், பலர் இன்று, மாடி மேல் மாடி கட்டி, குடும்பமும் விஸ்தாரமாகி, புதிய தலைமுறைகள் உருவாகி...அப்பப்பா!... என்னே மாற்றங்கள் நம் மடிப்பாக்கத்தில், இன்று காணும்போது!

அந்தக்காலத்தில்...அதாவது 1983-84வாக்கில், வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்தினுள் பேருந்தைக் கொண்டுவரவே பிரம்மப் பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது நினைவுக்கு வருகிறது. குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்து, அதற்கு ஆள் சேர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வரவழைத்து, சினிமா நடிகை நளினியை சிறப்பு விருந்தினராக அழைத்து (நம்ப ஊர் மக்களைத் திரட்ட பட்டபாடு இருக்கே...!)..ஒரு பெரிய ‘மாஸ்’ காட்டி, ரொம்பவும் லோல்பட்டபிறகுதான் வேளச்சேரி வழியாக பஸ் வர ஆரம்பித்தது என்று தோன்றுகிறது.

இன்னொரு விஷயம் - பொன்னியம்மன் கோயில் கிணறு.. அதனருகில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டு வாசகங்கள் - எம்.ஜி.ஆர் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தபோது திறந்து வைத்த கிணறு எனப் பறைசாற்றும். எனக்குத் தெரிந்து மடிப்பாக்கத்தில் மிகவும் பழையவீடு என்றால், பொன்னியம்மன் கோவிலுக்கு வலதுபுறத்தில் அமைந்த ஒரு வீடு... காம்பவுண்ட் சுவற்றில் `விஸ்வநாதன்’ என்று போட்டிருந்ததாக நினைவு.

கடந்த சில வருடங்களில், மடிப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் மதிப்பு பன்மடங்கு அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிகிறது; கல்யாண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் என பல முளைத்து, நிலத்தடி நீரைக் குடிநீராகப் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டுயே ஒரு பத்து வருடங்கள் ஆகிறது.

முன்பெல்லாம், ஒரு ஃபோன் பண்ணவேண்டுமென்றால், ஒரு 2-3 கிலோமீட்டர் வரை செல்ல வேண்டியிருந்தது; 1990களின் இறுதியில், தடுக்கிவிழுந்த இடங்களிலெல்லாம் STD-PCOக்கள் காணப்பட்டன. இன்றைய மடிப்பாக்கத்திலோ, காண்போர் கையிலெல்லாம் ஒரு செல்போனைப் பார்க்கமுடிகிறது. ஒரு வங்கிகூட இல்லாதிருந்த மடிப்பாக்கத்தில் இன்று ஏழெட்டு வங்கிகள்; தவிர எனக்குத் தெரிந்தே ஒரு 7-8 ATMகள்.

முன்பெல்லாம் எங்கள் பகுதிக்கு யாராவது புதியவர்கள் வந்தால் ஏரியாவே வைத்தகண் வாங்காமல் அவர்களையே உற்று நோக்கும். இப்போதோ, ஒரே ஃபிளாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத அளவிற்கு ஒரு அன்னியோன்னியமற்ற நகர்ப்புர கலாச்சாரத்தில் சிக்கி தன் சுயமிழந்த மற்றுமொரு புறநகர்ப்பகுதி என்ற அளவில் மடிப்பாக்கம் இருக்கிறது.

மாசடைந்த காற்று, சாக்கடைகள், குப்பைக்கூளங்கள், பெருகிவிட்ட ஜனத்தொகை, வாகனப்பெருக்கம், நெரிசல்மிகு சந்திப்புகள் நிறைந்த ஒரு பெருநகரின் இயந்திர வாழ்க்கைக்குப் பழகிவிட்ட அவசர யுக மனிதர்கள் நிறைந்த ஒரு developed suburbஆகத்தான் மடிப்பாக்கம் எனக்குத் தெரிகிறது.

Labels: ,

20 Comments:

At 4:32 PM, Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

மலரும் நினைவுகள் திரும்பிப் பார்க்க இனிதானவைதான்!
படித்தேன், ரசித்தேன்!

 
At 4:32 PM, Blogger பாச மலர் said...

//முன்பெல்லாம் எங்கள் பகுதிக்கு யாராவது புதியவர்கள் வந்தால் ஏரியாவே வைத்தகண் வாங்காமல் அவர்களையே உற்று நோக்கும். இப்போதோ, ஒரே ஃபிளாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத அளவிற்கு ஒரு அன்னியோன்னியமற்ற நகர்ப்புர கலாச்சாரத்தில் சிக்கி தன் சுயமிழந்த மற்றுமொரு புறநகர்ப்பகுதி //

எதார்த்தமான வரிகள்..

 
At 4:43 PM, Anonymous Maheshwaran said...

Venkat, this is the best piece written by you in recent times in your original style. Keep it up!

 
At 4:47 PM, Anonymous Jebamani Felix said...

////முன்பெல்லாம் எங்கள் பகுதிக்கு யாராவது புதியவர்கள் வந்தால் ஏரியாவே வைத்தகண் வாங்காமல் அவர்களையே உற்று நோக்கும். இப்போதோ, ஒரே ஃபிளாட்டில் வசித்து வந்தாலும் ஒருவரை ஒருவர் தெரியாத அளவிற்கு ஒரு அன்னியோன்னியமற்ற நகர்ப்புர கலாச்சாரத்தில் சிக்கி தன் சுயமிழந்த மற்றுமொரு புறநகர்ப்பகுதி //

எதார்த்தமான வரிகள்..//

ரிப்பீட்டேய்............!

 
At 4:56 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

ஜீவா, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//மலரும் நினைவுகள் திரும்பிப் பார்க்க இனிதானவைதான்!//

வாழ்க்கையின் இனிமையான ஒரு பகுதி, மலரும் கடந்தகால நினைவுகள்தானே... அதில் நனைவது ஒரு சிற்றின்பம், எனினும் இனிமையான அனுபவம்.

 
At 5:11 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

பாசமலர், நன்றி.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

Privacy என்ற பெயரில் மேலை நாட்டோர் neighboursஏ வேண்டாம் என்று நினைத்தார்கள்/நினைக்கிறார்கள். இன்று இந்தியப் பெருநகரங்களெங்கும் அதே நிலைதான்.

 
At 5:29 PM, Blogger enRenRum-anbudan.BALA said...

மலரும் நினைவுகள் திரும்பிப் பார்க்க இனிதானவை தான்!

படித்தேன், ரசித்தேன் !!!

நாஸ்டால்ஜியா நாஸ்டால்ஜியா :)

எனது "சிறுவயது சிந்தனைகள்" பதிவுகளை, சமயம் கிடைக்கும்போது வாசித்துப் பார்க்கவும்.

எ.அ.பாலா

 
At 5:51 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

என்றென்றும் அன்புடன் பாலாவின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கட்டாயம் நீங்கள் குறிப்பிட்ட உங்கள் பதிவுகளை நான் வாசிக்கிறேன்.. கருத்தும் சொல்வேன் :)

 
At 3:58 PM, Blogger தமிழ்நெஞ்சம் said...

மலரும் நினைவுகளில் மூழ்கினால் மீழ முடியாது.. அந்த என்னுடைய பழங்காலத்துக்கே நான் போனதை உணருகிறேன். உங்களது பதிவைப் படித்த பிறகு

 
At 3:15 PM, Anonymous Anonymous said...

I am from Raichur, Kartnataka and me too feeling the same regarding my native. A very thoughtful blog. Please do write more.

K.R.Srinivasan, Raichur.

 
At 10:46 AM, Anonymous maheshwaran said...

என்னவோ தெரியவில்லை, எனக்கு இது போல பலமுறை Nostalgic-ஆக தோன்றும். நாம் ஒரு வேளை 'out-of-sync'-இல் போய்க்கொண்டு இருக்கிறோமோ என்று தோன்றும். உங்க பதிவை படித்தவுடன் நம்மை போல பழங்காலத்துக்கு போவது பலருக்கு இன்பம் போல என்று ஆசுவாசம் தோன்றியது. உங்கள் பதிவு உண்மையிலேயே இனிமையான பதிவு

 
At 8:21 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

தமிழ்நெஞ்சம், K.R.Srinivasan, maheshwaran.. உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

 
At 9:45 AM, Blogger லக்கிலுக் said...

பதிவுக்கு இன்னொரு மடிப்பாக்கத்தானின் நன்றிகள்! :-)

நீங்கள் எனக்கு முந்தைய ஒரு தலைமுறை என்பது பதிவில் தெரிகிறது.

//அன்றைய நாளில், பாக்கெட் நாவல்களும், மாயாஜால கதை புத்தகங்களும், அம்புலிமாமாக்களும், பாலமித்ராக்களும், இன்ன பிற காமிக்ஸ்களும், Sportstarகளும் பள்ளிக்கூட பாடங்களைவிட அதிக கவனத்தை ஈர்த்த புத்தகங்கள்.//

கூட்ரோடு TNS வேஸ்ட் பேப்பர் மார்ட்டில் இவை நிறைய கிடைக்கும். ஒரு ராணி காமிக்ஸ் 75 காசு. படித்துவிட்டு திருப்பி தந்தால் 50 காசு திரும்ப கொடுப்பார்கள்.


//மடிப்பாக்கம் கூட்டு ரோடு, பொன்னியம்மன் கோவில், கூட்டு ரோட்டிலிருந்து பாதாள விநாயகர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ஒரு கீத்து கொட்டகையில் அமைந்த தனலஷ்மி திரையரங்கம்,//

இது கீழ்க்கட்டளைக்கு Shift ஆனது தெரியும் தானே? பழைய மடிப்பாக்கம் தனலஷ்மியில் வாத்தியாரின் ஆயிரத்தில் ஒருவன் பார்த்ததாக லைட்டாக நினைவு!


//சைதாப்பேட்டைக்கும் மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலுக்கும் இடையே ரொம்ப அரிதாக ஷண்டிங் அடித்த M11 என்ற மினி பஸ்தான் மடிப்பாக்கத்தினுள் நுழைந்த முதல் பேருந்து என நினைக்கிறேன்.//

ஒரு பிள்ளையார் சதுர்த்தி அன்று M11 இயக்கப்பட்டதாக நினைவு. பொன்னியம்மன் கோயிலுக்கு அடுத்திருக்கும் பிள்ளையார் கோயில் வாசலில் M11க்கு பூஜை போட்டார்கள்.

பஸ் ஸ்டேண்டு இல்லாத காலம் என்பதால் பொன்னியம்மன் கோயில் ஆலமரத்துக்கு கீழே அந்த பஸ்ஸை நிறுத்துவார்கள் (அந்த ஆலமரத்தை அங்கே நட்டு வைத்தது என் தந்தையும், மாமாவும்)

ராஜீ அண்ணன் தான் மடிப்பாக்கத்தின் முதல் பஸ் கண்டக்டர். சென்ற ஆண்டு ராஜூ அண்ணனின் மகன் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டான் :-(


//அதாவது 1983-84வாக்கில், வேளச்சேரி வழியாக மடிப்பாக்கத்தினுள் பேருந்தைக் கொண்டுவரவே பிரம்மப் பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது நினைவுக்கு வருகிறது.//

இந்த தடத்தில் முதன்முதலில் வந்த பேருந்து 51E தானே? (கோட்டூர்புரத்துக்கு ஒரு பஸ் விட்டார்களே அது பிற்பாடு என்று நினைக்கிறேன்)

யாரும் அப்போது எல்லாம் புட்போர்டு அடிக்கமுடியாது. சாலையின் இருபக்கமும் வளர்ந்திருக்கும் வேலிகாத்தான் முள்காடு சன்னலுக்கும் புகுந்து நம் முகத்தை பதம் பார்த்ததுண்டு.

இந்த தடத்தில் முதல் பஸ்ஸை ஓட்டியவர் வேம்புலி. சில ஆண்டுகளுக்கு முன்னால் புல் மப்பில், சைதாப்பேட்டையில் பஸ் என்று நினைத்து லிப்ட் கேட்க ட்ரெயினை நிறுத்த முயற்சித்து விபத்தில் பலியானார்.


//சினிமா நடிகை நளினியை சிறப்பு விருந்தினராக அழைத்து//

எனக்கு இது நினைவில்லை. ஆனால் 'முந்தானை முடிச்சு' தீபா ஒரு விழாவுக்கு வந்ததும், கல்யாண கந்தசாமி கோயில் கும்பாபிஷேகத்துக்கு செய்திவாசிப்பாளர் பாத்திமா வந்ததும் நன்கு நினைவிருக்கிறது.


//பொன்னியம்மன் கோவிலுக்கு வலதுபுறத்தில் அமைந்த ஒரு வீடு... காம்பவுண்ட் சுவற்றில் `விஸ்வநாதன்’ என்று போட்டிருந்ததாக நினைவு.//

இது இன்ஜீனியர் வீடு. இவர் வீட்டு தோட்டத்தில் தான் 'மாங்காய் லூட்டிங்' செய்வோம். இவர் வீடு கட்டிய அதே காலத்தில் கோழிப்பண்ணை ஜூலியஸ் வீடும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.


நான் முதலில் ஏரிக்கரை சங்கரவித்யாலயா, புழுதிவாக்கம் எலிமெண்டரி அதன்பிறகு புழுதிவாக்கம் தந்தை பெரியார் உயர்நிலைப்பள்ளி பிற்பாடு நங்கநல்லூர் நேருவில் படித்தேன்.. நீங்கள் செயிண்ட் தாமஸ் ஸ்கூலில் படித்தீர்களா? :-)

 
At 5:41 PM, Blogger dondu(#11168674346665545885) said...

நான் சமீபத்தில் 1969-ல் ஹிந்து காலனிக்கு குடிவந்தபோது மடிப்பாக்கம் அவ்வளவாக டெவலப் ஆகவில்லை. எங்கள் ஏரியாவும்தான். எங்கள் வீட்டிற்ற்கு பின்புறமெல்லாம் தரிசு நிலங்களே, என்ன ப்ளாட் போடப்பட்டிருந்தன. அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 
At 7:24 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

நன்றி லக்கிலுக் தங்கள் வரவிற்கும், பகிர்வுக்கும்.

//கூட்ரோடு TNS வேஸ்ட் பேப்பர் மார்ட்டில் இவை நிறைய கிடைக்கும். ஒரு ராணி காமிக்ஸ் 75 காசு. படித்துவிட்டு திருப்பி தந்தால் 50 காசு திரும்ப கொடுப்பார்கள்.//

நான் கூட அதே TNS கடையில்தான் பழைய ஸ்போர்ட்ஸ்டார்களை மலிவு விலையில் வாங்குவது வழக்கம். அதற்காகவே அந்நாட்களில் கிரிக்கெட் பிரியர்கள், பழைய பேப்பர் கடைகளை நோக்கிப் படையெடுப்பது வழக்கம்.

// கீழ்க்கட்டளைக்கு Shift ஆனது தெரியும் தானே? பழைய மடிப்பாக்கம் தனலஷ்மியில் ..//

ஓ.. கீழ்க்கட்டளை தனலட்சுமியில் நான் பார்த்த ஒரே படம் தலைவர் நடித்த 'விடிஞ்சாக் கல்யாணம்' படம்.

//இந்த தடத்தில் முதன்முதலில் வந்த பேருந்து 51E தானே? //

அப்படித்தான் நினைக்கிறேன்.
ஆனால், அதற்கும் முன்பாக 18Dகூட வந்ததாக நினைவு.

//நீங்கள் செயிண்ட் தாமஸ் ஸ்கூலில் படித்தீர்களா? :-)//

இல்லை. நான் ப்ரின்ஸில் +2 முடித்தேன்.

 
At 7:41 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

டோண்டு ராகவன் அவர்களே, உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

 
At 7:44 AM, Anonymous Balasubramani said...

மடிப்பாக்கம் - a great place to live in. Whenever I had to visit Chennai I used to stay in my uncle's house in Karthikeyapuram. My cousin was a part of the Karthikeyapuram cricket team. It was almost two decades ago since I last been to madipakkam. It was a wonderful place then. I dont know much about present day madipakkam. Well written.

 
At 3:27 PM, Blogger வெ.சா said...

இப்போது தான் பார்த்தேன். மடிபாச்க்கம் தான் நம்மை உறவாட வைத்திருக்கிறது என்று அறியும்போது சரி, மடிப்பாக்கம் பற்றிச் சொல்ல ஒரு நல்ல விஷய்மாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படலாம். இல்லையெனில் மடிப்பாக்கமே, மடிப்பாக்கம் என்ன சென்னையே, சென்னை என்ன தமிழ் நாடே ஒரு குப்பைமேடாக, சாக்கடைக்கும்பியாகத் தான் எனக்குப் படுகிறது. ஆட்சியாளர்களின் மனம் கலாச்சாரம் போலத்தானே வாழும் இடமும் இருக்கும்.

போகட்டும். உங்கள் பெயரும் வெங்கட் என்று தெரிகிறது. இந்த லக்கிலுக் என்ன பெயர், என்று தலையைச் சொரிந்துகொண்டிருந்த எனக்கு, இவரும் மடிப்பாக்கக் காரர் என்று தெரிந்தது. ரோடைத் தாண்டினால் நங்கநல்லூரில் டோண்ட் ராகவன். அவர் தயவால் தான் இந்த ப்ளாக் எனக்குக் கிடைத்தது. அவர் சொல்லிக்கொடுத்துத்தான் ப்ளாக்கை பயன்படுத்துவதும் எனக்குத் தெரிந்தது. அதாவது அவர் சொல்லிக் கொடுத்தவரை.அதற்கு மேல் ஒரு அங்குலம் கூட அதிகம் நகர நான் கற்றுக்கொடுக்கவில்லை. ஏனெனில் அதன் பிறகு அவர் தரிசனம் கிடைக்கவில்லை.

மடிப்பாக்கத்தின் வசந்த்த காலம், நீங்கல் எழுதியுள்ளவை நான் அறிந்தவனில்லை. நான் வந்தது 2000-ல். நிலததடி நீர் 200 அடிக்குக் கீழே போய் உப்புக்கரிக்கவும் ஆரம்பித்தபிறகு.

வெ.சா.

 
At 8:16 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

வெ.சா அவர்களே, உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி.

 
At 2:15 PM, Anonymous Yuavaraju Nataraj said...

மடிப்பாக்கம் பற்றி உங்கள் நினைவுகளை படித்தவுடன் சில நிமிடங்கள் மனது கனத்தது.நான் அங்கு வாழ்ந்த 6 வருடங்கள் நினைவில் வந்து நின்றன.மடிப்பாக்கம் என்னால் மறக்க முடியாத, என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றிய இடம்.மடிப்பாக்கம் கூட்டு ரோடு, பொன்னியம்மன் கோவில்,பொன்னியம்மன் கோயில்,ஏரி, அதனருகில் ஐயப்பன் கோவில் மற்றும் நான் இருந்த கார்த்திகேயபுரம் II வது குறுக்கு தெரு,அண்ணாச்சி கடை,மானசா Flat எதையும் மறக்க முடியாது.மிக்க நன்றிகள்

 

Post a Comment

<< Home