இன்று காலை அலுவலகம் வந்தவுடன்,
வலையுலகம் வலைப்பதிவில் படித்த விஷயம் என்னைத் தூண்ட, எனது மதிய உணவு நேரத்தில், மனம் போன போக்கில் எழுத்தப்பட்ட பதிவு இது:***
ஜெயகாந்தனது '
நடிகை நாடகம் பார்கிறாள்' மகத்தானதொரு படைப்பு. ஜெயகாந்தனையோ, பீம்சிங் பற்றியோ எதுவும் அறிந்திராத அப்போது எனக்கு வயது 10 இருக்கும். இருந்தும், அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய ஆர்வத்திற்குக் காரணம், அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி நான் படித்த பள்ளியில் படமாக்கப்பட்டது என்பதுவேயன்றி வேறொன்றும் இல்லை.
கருப்பு வெள்ளை படம்
(ஆமாம், கலர்ல எடுத்திருந்தா மட்டும் என்னவாம், அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் கருப்பு வெள்ளை டிவிதானே) என்பதாலும் சுவாரஸ்யம் குறைவாகவே இருந்தது. ஸ்ரீகாந்த்-லக்ஷ்மி நடித்த படம் என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன்.
லக்ஷ்மி நாடக நடிகை. ஸ்ரீகாந்த் பத்திரிக்கையாளன்.
படம் துவங்கிய ஒரு சில மணித்துளிகளிலேயே எங்கள் பள்ளி ஆடிட்டோரியத்தைக் காண்பித்தார்களா, ஒரே விசில்தான் என் மனசுக்குள்.
காட்சி இதுதான் - நாடகம் துவங்கப்போகும் சில நிமிடங்களுக்கு முன்னர், மேடைக்குப் பக்கவாட்டிலிருக்கும் மேக்-அப் அறையில் நாடக நடிகை லக்ஷ்மி, கைக்காண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டே மேக்-அப் செய்துகொண்டு நாடகத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பார்; மேடைக்குச் சற்று முன்பாக உள்ள பார்வையாளர் வரிசையின் முதல் வரிசையில் நாடக நிர்வாகி ஒய்.ஜி.பார்த்தசாரதியோடு, பத்திரிகை விமர்சகர் ஸ்ரீகாந்த் அவருக்காக ஒதுக்கப்பட்ட நாற்காலி குறித்த ஒரு சர்சையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர்களது அந்த வாக்குவாத ஓசை லக்ஷ்மியின் காதில்விழ, மேக்-அப் அறையிலிருந்த ஒரு சிறிய கண்ணாடி ஜன்னல்வழியே ஒரு கணம் எட்டிப்பார்ப்பார். பின்னர் மறுபடி தன் மேக்-அப் வேலையில் மூழ்குவார். ஸ்ரீகாந்தை மீண்டும் பார்க்கத் தூண்டும் அவரது மனம். என்றாலும் நாடகம் இன்னும் சில கணங்களில் துவங்கப்போகிறதே.. அதனால், ஸ்ரீகாந்தைக் காணத்தூண்டும் உணர்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு நடிக்கத் தயாராவாள். ஸ்ரீகாந்தை ஒரு வழியாக சமாதானப்படுத்திய ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவரை லக்ஷ்மியிடம் சென்று அறிமுகப்படுத்துவார். ஸ்ரீகாந்தைப் பார்த்த மாத்திரத்திலேயே லக்ஷ்மி தன் மனதைப் பரிகொடுத்து காதலில் விழுந்துவிட்டாரா என்றெல்லாம் அன்று யோசிக்கத்தெரியாத பருவம் எனக்கு.
ஆனால், அதே படத்தை மீண்டும் ஒரு பத்து வருடங்கள் கழித்து எனது கல்லூரிக் காலத்தில் பார்த்தபோது நட்பு, காதல், திருமணம் போன்றவற்றைப் பற்றிய மிக நுணுக்கமான விஷயங்கள் புலப்பட்டது. என்னதான் ஒரு அருமையான திரைக்கதையின் துணைகொண்டு மனித உணர்வுகளின் நுணுக்கங்களை படமாக்கினாலும் அது சென்று சேர்வதென்னவோ பொறுமைமிக்க ரசிகர்களிடம் மட்டுமே என்பதையும் புரிந்துகொண்டேன்.
'பொறுமை' தான் தலாய பண்பு, பல விஷயங்களை அறிந்தும் தெளிந்தும் கொள்வதற்கு உதவியாய் இருப்பதும் அதுவே. இந்தப் பொறுமை இல்லாததால்தான் உறவுகளின் உன்னதங்களையும் மனம் அறிவதில்லை, உறவுமுறிதல் பற்றிய கவலைகளைப் பற்றியும் மனம் சிந்திப்பதில்லை.
ஒரு சினிமா உங்களுக்குள் ஏதாவது கருத்தைத் தோற்றுவித்ததா என்று கேட்டால் சில படங்களின் பெயரை நீங்கள் சொல்லலாம், குறிப்பாக சினிமாவை நீங்கள் வெறும் கேளிக்கைக்காக மட்டுமே பார்க்காத பார்வையாளராக இருந்தால்.
'
நாங்கள் என்றும் நல்ல நண்பர்களாக இருக்க விரும்புகிறோம்; திருமண வாழ்க்கையில் அது சாத்தியமில்லாததால் விவாகரத்து கோருகிறோம்' என்று ஸ்ரீகாந்தும், லக்ஷ்மியும் வக்கீலை அணுகும் காட்சி, 'திருமணம் தேவையா' என்ற கருத்தினை என் மனதில் தோற்றுவித்தது. என்றாலும், வெகுவிரைவிலேயே திருமணமும் செய்துகொண்டேன் என்பது, என்னுள் ஓடும் சிந்தனைக்கும் அதனைச் செயல்படுத்தும் எனது திறனுக்கும் இடையேயான இடைவெளிக்கான சான்று.
***
அன்பு, பாசம், காதல், நட்பு - எந்த உறவாக இருந்தாலும், சம்பந்தப்பட்டவர் மத்தியில் நிகழும் சிறிய கருத்துவேறுபாடு என்பது இருவருக்கு மத்தியில் விவாதப்பொருளாகிப் போனால் (point of discussion) பெரிய மனச்சிக்கலாக உருவெடுத்து பரஸ்பர அவநம்பிக்கையைத் தோற்றுவித்து உறவைத் துண்டித்துக்கொள்ளவும் தயங்காத நிலைக்குத் தள்ளிவிடுகிறது. சாமியார்கள் முதல் சாமானியன் வரை இந்த difference of opinion என்பது ஒரு கட்டத்தில் பரஸ்பர காழ்ப்புணர்ச்சி (mutual hatred), வசைபாடுதல் என்று என்னமோ ஜென்ம விரோதிகளைப் போல மோதிக்கொள்ளும் அளவிற்கு போய்விடுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தினுள் வாகனத்தை ஓட்டி, அனைத்து சாலை விதிகளையும் அனுசரித்து சமயோசித புத்தியோடு (presence of mind) சென்றாலும் சாலை விபத்துக்கள் நிகழ்ந்துவிடுவதுபோல சில உறவுமுறிவுகள் விபத்துக்களாய் நேர்ந்துவிடுகிறது. அங்கனம் முறிந்த உறவுகள், விடுபட்டுப்போன தொடர்புகள் மீண்டும் கைகூட வாய்ப்புகள் உள்ளதா? உடைந்து சிதறிய கண்ணாடிக் கோப்பையின் துண்டுகளை மீண்டும் சேகரித்து ஒட்டிவைத்தாலும் விகாரமாய்த் தெரியும் விரிசல்கள் எனக்குச் சொல்வதெல்லாம் உறவின் நினைவுகளைப் போல முறிவின் சுவடுகளும் அழியாதவை என்பதே.
கருத்துவேறுபாடு என்பது தவிர்க்க முடியாததாயினும், அதுபற்றிய பேச்சு விவாதமாக உருவெடுத்த தருணம் தவிர்க்கப்பட்டிருப்பின் இந்த உறவு முறிவுகள் நிகழ்ந்திருக்காதோ என்னவோ.
சின்னச் சின்ன விஷயங்கள்தான் பெரிய உறவுகளுக்கு வேட்டுவைக்கிறது. இதற்கெல்லாம் பெரும்பாலும் நமது '
தான்' என்ற கர்வமமும் (ego), அது தொடர்பான விருப்பு வெறுப்புகள் மற்றும் எதிர்ப்பார்புகளும் காரணமாக அமைந்துவிடுகிறது. ஒருவரைப் பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும் சூழலில், எதிர்ப்பார்புகளுக்கு கொஞ்சம் முரணாக இருந்தாலும், தடாலடியாக அவரைப் பற்றிய ஒரு நேர்முரணான கருத்துக்குத் தாவி (jumping to the opposite conclusion), அதனாலேயே பல உறவுகள் முறிகின்றன. எதிர்பார்புகளற்ற உறவுகளைப் பாருங்கள்,
ஹை-பை என்று எப்போதும் போல் நம் வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது- அவர்களோடு ஓஹோ என்று ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, அதனால் என்றும் அவர்களிடமிருந்து உறவு-முறிவு (break of relationship) பற்றிய சாத்தியத்திற்கு இடமில்லை.
தான் நினைப்பதுதான் சரி என்ற கண்ணோட்டம்,
'உனக்கென்ன தெரியும்?',
'உன்னை விட எனக்கு இதில் அதிக அனுபவம் இருக்கு', '
உன் வயசு என்ன, என் வயசு என்ன?' என்றெல்லாம் அடுத்தவர் மீது கருத்து ஆக்கிரமிப்பு நடத்த முற்படும் தருணங்களில் நட்பின் உறவு (bondage of friendship) மெல்ல அறுகிறதை சம்பந்தப்பட்ட நபர்கள் உணரத் தவறுகிறார்கள். நட்பின் உறவு என்பதன் தேவையை உணர்ந்து, இரண்டு கை தட்டினால் தானே ஓசை என்று எல்லாவற்றையும் பொருத்துக்கொண்டு போய்விடுவதேகூட சாலச் சிறந்ததோ என்று கூடத் தோன்றுகிறது... ஆனால் அது சுத்த பிற்போக்குத்தனமாயிற்றே... அதைத்த்தானே நமது பெண்குலம், காலம்காலமாக செய்துகொண்டு வருகிறது.
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல் வெறும் வெளித்தோற்றத்தினால் அமைந்த சமாதானமானது பலவகையில், திருமண வாழ்கைக்குப் பொருத்தமாகவே இருந்து வந்திருக்கிறது (இப்போதும் இருக்கிறது).
கடந்தமுறை விடுமுறைக்கு ஊருக்குப் போயிருந்தபோது, நீண்டகாலம் முன்னர் காதல் திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடி, அப்போது ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதேயில்லை என்ற நிலையிலிருந்ததைப் பார்க்க நேர்ந்தது.
'நேற்றுவரை நல்லாத்தானே இருந்தீர்கள், இன்று என்ன ஆச்சு உங்களுக்குள்? நீயாவது சமாதானமாப் போகலாமேமா' என்று மூன்றாவது நபர் யாராவது குறுக்கிட்டு உபதேசித்தால் (அல்லாது ஆலோசித்தால்),
'இல்லை, இல்லை, என்னிக்குமே அவன் அப்படித்தான், குழந்தைக்காகத்தான் நான் இத்தனை நாளும் பல்லைக்கடித்துக் கொண்டிருந்தேன்' என்கிறாள். அவனிடம் கேட்டால், அகிரா குரோசவாவின் ரஷோமான் போல (அதான், நம்ப விருமாண்டி திரைக்கதை ஸ்டைலில்) அவன் பங்கிற்கு ஒரு கதையை சொல்கிறான். அதுவரை அவர்கள் காத்து வந்தது பொறுமையா, சகிப்புத்தன்மையா... எதுவாக இருந்தாலும் அதிலும் ஒரு சுயநலத்தேவையும் இல்லாமல் இல்லை, இல்லையா? ஆனால், அந்த சுயநலத்தில் என்ன தவறு இருக்கிறது, ஒவ்வொன்றினையும் இது உண்மையான அன்பா, காதலா, நட்பா என்ற ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், எந்த உறவுமே நீடிக்கப்போவதில்லை.
***
Labels: காதல் நட்பு சினிமா அனுபவம்