பழைய பாரம்பரியத்தின் சாயல்களும், நவீன கலாச்சாரப் படையெடுப்பின் தாக்கமும் ஒட்டியொட்டிக காணப்பட்ட ஆலயத்தினருகில் நான் கடைசியாகப் பார்த்த திருவனந்தபுர தெருக்களின் காட்சியைத்தான் இந்த புகைப்படங்கள் நியாபகப்படுத்துகிறது. நான் கண்ட நகரங்களிலேயே மிகவும் எளிமையான தோற்றத்தைத் தரும் ஒரு மாநிலத் தலைநகரம் எதுவென்றால் அது திருவனந்தபுரம்தான் என்று அறுதியிட்டுச் சொல்வேன். சாதாரண மனிதன் முதல் சனிமா நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்கள் வரை எளிமையையே ஆபரணமாகப் பூண்டிருந்த கேரள சமுதாயம் இன்றைய நுகர்வோர் கலாச்சாரயுகத்தில் எப்படி இயங்குகிறது என்பது வேறு விஷயம். ஆனால், கேரளத்தின் அடையாளம் என்று சொல்லும்போது என் நினைவுக்கு வருவது கதகளி, மோகினியாட்டம், களரிபயட்டு, தரவாடுகள், திருச்சூர் பூர யானைகள் அணிவகுப்பு, படகுப் போட்டி, ஓணம் பண்டிகை.. இதோடு பத்மநாப சுவாமி கோயில் கோபுரம்தான்.
திருவனந்தபுரத்தின் பெயர்க்காரணத்தை யாவரும் எளிதில் யூகித்துவிடலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமரை மணாளன் என்று நம் தமிழில் மிக இனிமையாக வழங்கப் பெறும் அனந்த பத்மநாப சுவாமி கிடந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பார். ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாக புஜங்கசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவச்சிலை ஒரே வாயிலில் நின்று தரிசிக்க இயலாதவாறு மிகப்பெரிய அளவில் உள்ளதால், பக்தனுக்கு வசதியாக மூன்று வாயில்கள் அமைந்திருக்கும். முதல் வாசலில் பெருமாளின் திருமுகத்தையும், இரண்டாவதில் பெருமாளின் திருவயிற்றுப்பகுதியும், மூன்றாவது வாயிலில் பெருமாளின் திருவடிகளையும் கண்டு சேவிக்கலாம். பெருமாளின் திருமுகத்தினருகே காணப்படும் சிவ லிங்கம் சைவ-வைணவ மோதல்களுக்கு ஒரு சவால். ஹரியையும் ஹரனையும் ஒருசேர தரிசித்து வணங்கும் வாய்ப்பு பக்தனுக்குக் கிடைக்கும் திருத்தலம் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள தாயார் - ஸ்ரீ ஹரி லக்ஷ்மித் தாயார்.
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக நான் அறிகிறேன்.
திருவாயமொழி பாசுரங்கள் பின்வருமாறு:
கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே (3794)
இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3795)
ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. (3796)
பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3797)
புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3798)
அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3799)
துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3800)
கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம் (3801)
நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3802)
மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3803)
அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3804)
பத்மநாப சுவாமி ஆலயம்/திருவனந்தபுரம் தொடர்புடைய கீழ்காணும் சில பயன் தரும் இணைப்புகள்:
ஆலயம் பற்றிய பதிவு
கானா பிரபாவின் ஆலய விஜயம்
சுவாதி திருநாள்
பத்மநாப சுவாமி ஆலயம்
***