பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Sunday, December 23, 2007

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்
அண்மையில் திருவனந்தபுரம் சென்று வந்த எனது தந்தையார், அங்கு எடுத்த சில புகைப்படங்களை நேற்று எனக்கு மின்மடல் மூலம் அனுப்பியிருந்தார். அவற்றில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் - அனந்த பத்மநாப ஸ்வாமி திருக்கோயிலுக்குச் செல்லும் வீதி, குளம் மற்றும் கோயில் நுழைவு வாயில்.

இதுவரை, ஐந்து முறை திருவனந்தபுரம் சென்றுள்ளேன். 1981, 1983 மற்றும் 1990களில் உறவினர் இல்லத் திருமணத்திற்காகப் பெற்றோரோடும், 1994ல் திரைப்பட விழாவைக் காணும் முன்னிட்டும், 2000ல் அலுவலக காரணங்களிலானும் - இப்படிப் பல்வேறு காரணங்களால் சென்றிருந்தாலும், ஒவ்வோருமுறையும் அனந்தபத்மநாபனை சேவிக்க மட்டும் மறந்ததில்லை.

பழைய பாரம்பரியத்தின் சாயல்களும், நவீன கலாச்சாரப் படையெடுப்பின் தாக்கமும் ஒட்டியொட்டிக காணப்பட்ட ஆலயத்தினருகில் நான் கடைசியாகப் பார்த்த திருவனந்தபுர தெருக்களின் காட்சியைத்தான் இந்த புகைப்படங்கள் நியாபகப்படுத்துகிறது. நான் கண்ட நகரங்களிலேயே மிகவும் எளிமையான தோற்றத்தைத் தரும் ஒரு மாநிலத் தலைநகரம் எதுவென்றால் அது திருவனந்தபுரம்தான் என்று அறுதியிட்டுச் சொல்வேன். சாதாரண மனிதன் முதல் சனிமா நட்சத்திரங்கள் போன்ற பிரபலங்கள் வரை எளிமையையே ஆபரணமாகப் பூண்டிருந்த கேரள சமுதாயம் இன்றைய நுகர்வோர் கலாச்சாரயுகத்தில் எப்படி இயங்குகிறது என்பது வேறு விஷயம். ஆனால், கேரளத்தின் அடையாளம் என்று சொல்லும்போது என் நினைவுக்கு வருவது கதகளி, மோகினியாட்டம், களரிபயட்டு, தரவாடுகள், திருச்சூர் பூர யானைகள் அணிவகுப்பு, படகுப் போட்டி, ஓணம் பண்டிகை.. இதோடு பத்மநாப சுவாமி கோயில் கோபுரம்தான்.

திருவனந்தபுரத்தின் பெயர்க்காரணத்தை யாவரும் எளிதில் யூகித்துவிடலாம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று. தாமரை மணாளன் என்று நம் தமிழில் மிக இனிமையாக வழங்கப் பெறும் அனந்த பத்மநாப சுவாமி கிடந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பார். ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாக புஜங்கசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளின் திருவுருவச்சிலை ஒரே வாயிலில் நின்று தரிசிக்க இயலாதவாறு மிகப்பெரிய அளவில் உள்ளதால், பக்தனுக்கு வசதியாக மூன்று வாயில்கள் அமைந்திருக்கும். முதல் வாசலில் பெருமாளின் திருமுகத்தையும், இரண்டாவதில் பெருமாளின் திருவயிற்றுப்பகுதியும், மூன்றாவது வாயிலில் பெருமாளின் திருவடிகளையும் கண்டு சேவிக்கலாம். பெருமாளின் திருமுகத்தினருகே காணப்படும் சிவ லிங்கம் சைவ-வைணவ மோதல்களுக்கு ஒரு சவால். ஹரியையும் ஹரனையும் ஒருசேர தரிசித்து வணங்கும் வாய்ப்பு பக்தனுக்குக் கிடைக்கும் திருத்தலம் இது ஒன்றாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இத்தலத்தில் எழுந்தருளியுள்ள தாயார் - ஸ்ரீ ஹரி லக்ஷ்மித் தாயார்.
பன்னிரு ஆழ்வார்களுள் நம்மாழ்வாரால் மட்டுமே மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாக நான் அறிகிறேன்.

திருவாயமொழி பாசுரங்கள் பின்வருமாறு:

கெடுமிட ராயவெல்லாம் கேசவா வென்ன நாளும் கொடுவினை செய்யும்கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடை யரவில்பள்ளி விரும்பினான் சுரும்பலற்றும் தடமுடை வயல் அனந்தபுரநகர்ப் புகுதுமின்றே (3794)

இன்றுபோய்ப் புகுதிராகி லெழுமையும் ஏதம்சார குன்றுனேர் மாடமாடே குருந்துசேர் செருந்திபுன்னை மன்றலர் போழில் அனந்தபுரநகர் மாயன்நாமம் ஒன்றுமோ ராயிரமாம் உள்ளுவார்க் கும்பரூரே. (3795)

ஊரும்புட் கொடியுமஃதே யுலகொல்லாமுண்டுமிழ்ந்தான் சேரும்தண் ணனந்தபுரம் சிக்கெனப் புகுதிராகில் தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணநாம் அறியச்சொன்னோம் பேரும் ஓராயிரத்துள் ஒன்றுநீர் பேசுமினே. (3796)

பேசுமின் கூசமின்றிப் பெரியநீர் வேலைசூழ்ந்து வாசமே கமழுஞ்சோலை வயலணி யனந்தபுரம் நேசம்செய் துறைகின்றானை நெறிமையால் மலர்கள்தூவி பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே. (3797)

புண்ணியம் செய்துநல்ல புனலொடு மலர்கள்தூவி எண்ணுமி னெந்தைநாமம் இப்பிறப் பறுக்குமப்பால் திண்ணம்நாம் அறியச்சொன்னோம் செறிபொழில் அனந்தபுரத்து அண்ணலார் கமலபாதம் அணுகுவார் அமரராவார். (3798)

அமரராய்த் திரிகின்றார்கட்கு ஆதிசேர அனந்தபுரத்து அமரர்கோன் அர்ச்சிக்கின்றங் ககப்பணி செய்வர்விண்ணோர் நமர்களோ. சொல்லக்கேண்மின் நாமும்போய் நணுகவேண்டும் குமரனார் தாதைதுன்பம் துடைத்தகோ விந்தனாரே. (3799)


துடைத்தகோ விந்தனாரே யுலகுயிர் தேவும்மற்றும் படைத்தவெம் பரமமூர்த்தி பாம்பணைப் பள்ளிகொண்டான் மடைத்தலை வாளைபாயும் வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே. (3800)

கடுவினை களையலாகும் காமனைப் பயந்தகாளை இடவகை கொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் படமுடை யரவில்பள்ளி பயின்றவன் பாதம்காண நடமினோ நமர்களுள்ளீர். நாமுமக் கறியச்சொன்னோம் (3801)

நாமுமக் கறியச்சொன்ன நாள்களும் நணியவான சேமம் நங்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் தூமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்துகொண்டு வாமனன் அடிக்கென்றெத்த மாய்ந்தறும் வினைகள்தாமே. (3802)

மாய்ந்தறும் வினைகள்தாமே மாதவா என்ன நாளும் ஏய்ந்தபொன் மதிளனந்தபுர நகரெந்தைக்கென்று சாந்தொடு விளக்கம்தூபம் தாமரை மலர்கள்நல்ல ஆய்ந்துகொண் டேத்தவல்லார் அந்தமில் புகழினாரே. (3803)

அந்தமில் புகழனந்தபுர நகர் ஆதிதன்னை கொந்தலர் பொழில்குருகூர் மாறன் சொல் லாயிரத்துள் ஐந்தினோ டைந்தும்வல்லார் அணைவர்போய் அமருலகில் பைந்தொடி மடந்தையர்தம் வேய்மரு தோளிணையே. (3804)


பத்மநாப சுவாமி ஆலயம்/திருவனந்தபுரம் தொடர்புடைய கீழ்காணும் சில பயன் தரும் இணைப்புகள்:

ஆலயம் பற்றிய பதிவு

கானா பிரபாவின் ஆலய விஜயம்

சுவாதி திருநாள்

பத்மநாப சுவாமி ஆலயம்

***

Labels:

8 Comments:

At 4:34 PM, Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

ஆம், நகரமும் கோவிலும் மிகவும் வியக்கத்தக்கதே.
நான் முதலில் பார்த்து வியந்தது - கோவிலின் கோபுரம் - அது அகலவாட்டில் நீளமாக - அனந்தசயனனைப்போல் நீண்டு இருந்தது - பற்பல வருடங்களாகியும் நினைவை விட்டு நீங்கவில்லை.
பதிவுக்கு நன்றி!

 
At 6:16 PM, Blogger cheena (சீனா) said...

திருவனந்த புரத்தில் இரண்டாண்டு காலம் பணி புரிந்த போது, பத்மநாப சுவாமி கோயிலுக்குச் சென்று வந்தது நினைவிற்கு வருகிறது. அமைதியான எளிமையான சிறிய தொரு ஊர். 20 ஆண்டு காலம் ஆகிவிட்டது

 
At 10:14 PM, Blogger ரசிகன் said...

பத்மநாப சுவாமி கோவிலை குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் போனதில்லை.உங்கள் பதிவின் மூலம் இதுவரை தெரியாத பல விபரங்களையும் தெரிந்துக்கொண்டேன்..
நன்றிகள்

 
At 10:14 PM, Blogger ரசிகன் said...

திருவாய்மொழி பாசுரங்களையும்,பொருத்தமான இணைப்புச் சுட்டிகளையும் அருமையா கொடுத்து இந்த இடுகையில் மறுபடியும் உங்க தனித்தன்மைய வெளிப்படுத்தியிருக்கிங்க....

சூப்பர்..

திருவாய்மொழி பாசுரங்களையும்,பொருத்தமான இணைப்புச் சுட்டிகளையும் அருமையா கொடுத்து இந்த இடுகையில் மறுபடியும் உங்க தனித்தன்மைய வெளிப்படுத்தியிருக்கிங்க....

சூப்பர்..

 
At 10:58 PM, Anonymous mangai said...

It reminded me of the days I visited this temple. I have visited this temple many times during my school days and college days. Its a great place.

Regarding Hari and Haran,
In Vanaiva thalam its rare to see both in one place. But in Saiva thalam its common.

Ex, Chidambaram, Nellai Appar,
Thiruchendur and many other places you can see see Vishnu or his other forms. In Sucheendram and Sankaran koil you can see Hariharan as single deity.

 
At 9:39 AM, Blogger Deepa said...

தாமரை குளத்தின் அருகே இருக்கும் மணிக்கூண்டு ( மேத்த மணின்னு சொல்லுவாங்க).. பார்க்க தமாஷா இருக்கும்.. ( ஆனா அந்த காலத்துக்கு அது தொழில்நுட்ப்பம்).. 1 - 2 ன்னு மணி அடிக்கும் போது ரெண்டு ஆட்டு டும்முன்னு முட்டிக்கும்.. இன்னமும் அது இருக்கான்னு தரியலை .. 2 மணி நேரமெல்லாம் இருந்து வேடிக்கை பார்த்திருக்கோம்

 
At 4:03 PM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

ஜீவா, சீனா, ரசிகன், மங்கை, தீபா - உங்கள் எல்லாருடைய வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

மங்கை, நீங்கள் கொடுத்த தகவலுக்கும் நன்றி. எனினும், நீங்கள் குறிப்பிட்ட அந்த சிவஸ்தலங்களிலும் (உதாரணம் - சிதம்பரம்) பெருமாளுக்கென்று தனி சன்னதி இருப்பதாக நினைவு; திருவனந்தபுர பத்மநாப சுவாமி கோவிலில் ஒரே சன்னதியில் மட்டும்தான் (அதுவும் பெருமாளுக்கு மிக அருகே சிவலிங்கம்) ஹரியையும் ஹரனையும் மிக அருகில், ஒரு சேர தரிசிக்க முடிகிறதாக அறிகிறேன்.. here i stand for correction.

தீபா, நீங்கள் சொல்வது போல மேத்தமணி முன்பாக மணிக்கணக்கில் இல்லைன்னாலும் நிமிடக்கணக்கில் காத்திருந்ததாக எனக்கும் நினைவு இருக்கிறது. எனினும், ஆடுகள் முட்டிக்கொள்வதைப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

 
At 4:39 PM, Blogger கானா பிரபா said...

பாரதீய நவீன இளவரசரே

அருமையான பதிவுக்கு நன்றி, உண்மையில் எந்த விதமான பிக்கல் பிடுங்கல் இல்லாமல் இறையருளோடு ஒன்றக்கூடிய ஆலயம் இது.

 

Post a Comment

<< Home