மாலை நேரம் வந்தால்...சன் தொலைக்காட்சியின்
பரபரப்பான செய்திகளூம், அரசியல் உள்நோக்குடனான செய்தித்தொகுப்புகளும், சீரழிக்கும் சீரியல்களும், கலாய்கும் காமெடிகளும், கோடம்பாக்க கச்சேரிகளுமே நம்மை ஆக்கிரமித்து விடுமோவென்றெண்ணி சன்னிலிருந்து விலகி, அப்படி என்னதான் இருக்கிறது என்று சற்றே தூர்தர்ஷன் பொதிகை சேனல் பக்கம் போனால், அதில் யாராவது ஒரு பாகவதர் சகிக்க முடியாதபடியாக கர்னாடக சங்கீதக் கச்சேரி பண்ணிக்கொண்டிருப்பார் (அவர் வீட்டிலேயே யாரும் அவர் பாடுவதைக் கேட்கமாட்டார்கள்!). தெலுங்குக் கீர்த்தனைகளுக்கு நான் எதிரி அல்ல; நல்ல வேளை, தமிழ் இவரிடமிருந்து பிழைத்துக்கொண்டது என்றுதான் நான் எண்ணிக்கொள்வேன். இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு Fox Sports பக்கம் போகவே பிடிக்கவில்லை. Tensportsல் எப்போதோ இந்தியா வெற்றி பெற்ற சில 'க்ளாசிக்' காட்சிகளைத் (ஷார்ஜாவில் ஜிம்பாப்வேயை விளாசித்தளும் டெண்டுல்கர்) திரும்பத்திரும்பக் காண்பித்து `எப்படி இருந்த நாம்...' என்று அழவைக்கிறார்கள். அரதப்பழசான ashes test போட்டிகளைப் பார்க்கும் யோது, அட இந்தக் கிரிக்கெட்டை அல்லவா நாம் காதலித்தோம் என்று பால்யகால நினைவுகளை சுண்டியிழுக்கச் செய்கிறது. இயன் போத்தம், டேவிட் கோவர், பாப் வில்லிஸ், டென்னிஸ் லில்லி, க்ரெக் சாப்பல், ராட்னி மார்ஷ் போன்ற ஆட்டக்காரர்களுக்கு தேசம்கடந்த ரசிகர்கள் உண்டு...1979 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திற்கெதிரான விவியன் ரிச்சர்ட்ஸினது ஆட்டத்திற்கு இணையான ஆட்டத்தை இன்றுவரை நான் கண்டதில்லை. மைக் ஹென்ரிக் என்ற வேகப்பந்துவீச்சாளரின் inswinging yorkerஐ, வெகுலாவகமாகத் திரும்பி, full tossஆக மாற்றி, deep square legற்கு மேல தூக்கியடித்த அந்த சிக்ஸர் காட்சி பசுமரத்தாணிபோல் பல ரசிகர்களது மனதில் பதிந்தது உண்மை. இன்று ப்ரெய்ன் லாராவின் copy book shotகளை நாம் ரசிக்கிறோம், அவை நமக்கெதிராக விளையாடப்படாதவரை. ஒரு ஆஸ்திரேலிய ரசிகர் குறிப்பிட்டார்...'எழில்மிகு இடதுகை ஆட்டக்காரர் டேவிட் கோவர், ஆஃப் சைடில் எழும் பந்தை ரொம்பவும் நேர்த்தியாக square cut அடித்து பவுண்டரிக்கு அனுப்புவதை நான் பார்க்கவேண்டும்; அதே சமயம், அவருக்கு அதனால் ரன்னும் கிடைக்காமலிருக்க வேண்டும்'..இப்படித்தான் இருக்கிறது இன்றைய 'நல்ல கிரிக்கெட்'டின் ரசனை. Match fixing, booking என்று இடைத்தரகு முதலாளிகளின் கையில் கிரிக்கெட் போய்விட்ட சூழ்நிலையில், இனியும் இந்த விளையாட்டில் எதை ரசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. உலகக் கோப்பைக் கால்பந்தாட்டப் போட்டி சமயத்தில் மட்டும்தான் கால்பந்தாட்டம் பற்றிய கவனம் நம்மில் பலருக்கு வரும். அதுபோல, உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி சமயங்களில் மட்டுமே கிரிக்கெட் பற்றிய எண்ணங்கள் நமக்குத் தோன்றினால் போதும் என்று படுகிறது. மீண்டும் சன் டிவி பக்கம்...ஆயிரம்தான் சொன்னாலும் சன் டிவிக்கு ஆதரவாக ஒருவித TINA (There Is No Alternative) factor நிலவத்தான் செய்கிறது. மென்னையான, மனதிற்கிதமான மெலடிவகைப் பாடல்களை சன் டிவியில்தான் கேட்க முடிகிறது. என்ன...நேரம் கொஞ்சம் oddஆகத்தெரியும்... இந்திய நேரப்படி இரவு ஒரு 11:30 மணிக்குமேல் சேனலை நோக்கினால், 'ஆஹா இன்ப நிலாவினிலே..', ' நீதானா என்னை அழைத்தது...' போன்ற கண்டசாலாவின் தேமதுர கானங்களையோ அல்லது 'ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்...''(சிகப்பு மல்லி), 'தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்...' (உல்லாசப்பறவைகள்) போன்ற இசைஞானியின் உன்னதமான இன்னிசைப் பாடல்களையோ நீங்கள் கேட்க நேரிடலாம். இந்த இன்னிசைப்பாடல்கள் மாலை நேரங்களில் ஏன் ஒலிப்பதில்லை? வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் மெகா சீரியல்களின் அழுதுவடியும் காட்சிகள் சற்று அமங்கலமாகத் தோன்றவில்லை? ஏசியாநெட், கைரளி...அதிலேயும் இதே கதைதான். அழுகை, அழுகை, அழுகை...(கரையரது மோளே கரையரது)... ஜீடிவியும், ஸ்டார் ப்ளஸ்ஸும் என்ன வாழுதாம்...ஹிந்தியில் அழுகிறார்கள். தெலுங்கு நண்பரிடம் விசாரித்தேன்...ஈடிவியிலும் அழுகைதானாம், பெரும்பாலும் எல்லா சீரியல்களிலும். தேசிய அளவில் நதி நீர்களை இணைக்க முடியுமோ இல்லையோ, இந்த கண்ணீர் நதிகளை இணைக்கமுடிகிறது. இந்துத்வம் அல்ல...இந்தக் கண்ணீர் சிந்துத்வம் தான் இந்தியாவை இணைக்கிறது. டிவி தொடர்கள் துவக்க காலத்தில் அவ்வாறு இல்லை. தூர்தர்ஷனில் வெளிவந்த 'ஹம்லோக்', 'ஏ ஜோ ஹை ஜிந்தகி' (1984-85) மற்றும் 'மால்குடி டேய்ஸ்' (1989-90) போன்ற ஹிந்தித் தொடர்களாக இருக்கட்டும், 'ஒரு மனிதனின் கதை' 'தரையில் இறங்கும் விமானங்கள்', 'நல்லதோர் வீணை' போன்ற தமிழ் தொடர்களாக இருக்கட்டும், பார்வையாளருக்கு வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதொரு அற்புதமான பரிமாணத்தையும், நான்ஸ்டாப்-நகைச்சுவையையும், நல்ல ரசனை அனுபவத்தையும் வழங்கியது. இதுதவிர, Bodyline Series, Giant Robot, Star Trek, Different Strokes போன்ற ஆங்கிலத் தொடர்களும் மற்றும் Spiderman-Cartoonம் நான் அதிகம் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சிகள் எனலாம். மத்தியதர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் அல்லது ஒரு தனி மனிதனின் மனதுக்குள் நிகழும் உணர்வுப் போராட்டம்...இவைதான் பெரும்பாலனா கதைகளின் களம். சிறந்த சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள்தாம் பெரும்பாலும் டிவி தொடர்களாக வருகின்றன. அழுகை இல்லை, மிகைப்படுத்துதல் இல்லை...மாற்று சிந்தனை, கவித்துவம், கலை நயம், யதார்த்தமான கதாபாத்திரம், அங்கதம் நிறைந்திருக்கும் இந்த டிவி தொடர்கள், அவற்றின் படைப்பாளிகளின் அறிவையும், திறமையையும், ஆற்றலையும் மட்டுமே பறைசாற்றுவதோடு நின்றுவிடாமல் பார்வையாளர்களின் ரசனையையும், பார்வையாளர் மீது படைப்பாளி கொண்டிருக்கும் மதிப்பீடுகளையும் எனக்கு உணர்த்தியது.
இன்றைய மெகா சீரியல்களோ, ஜனரஞ்சக சினிமாவே தேவலை என்று எண்ண வைத்துவிட்டது. இன்று, 'ஹியர் இஸ் க்ரேஸி' போன்றதொரு முழுநேர நகைச்சுவைத் தொடரைக்கூடக் கொடுக்க இயலாதது, சின்னத்திரை படைப்பாளிகளிடம் நிலவும் கற்பனைப் பஞ்சத்தையே காட்டுகிறது.
7ஜி ரெயின்போ காலனி, காதல், புதுப்பேட்டை, தவமாய்தவமிருந்து, வெயில் போன்ற படங்களின் தரம் சின்னத்திரை படைப்புகளில் இல்லை; சேரன், செல்வராகவன், தங்கர்பச்சான் போன்ற இயக்குனர்கள், நல்ல படைப்புகள் உண்டாக்குவதில் காட்டும் முனைப்பும், புதிய அணுகுமுறையும் சின்னத்திரை மெகா சீரியல் படைப்பாளிகளிடம் இல்லை என்பதும் வேதனை தரும் விஷயம்.