செம்மீன் - மானஸ மைனே வரு...
செம்மீன் படப் பாடல் ‘கடலினக்கரப் போணோரே..’ பாடல் தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் கூட ‘ஹிட்’ ஆன ஒரு பிறமொழிப்பாடல். செம்மீன் படத்தின் பாடல்களை நான் பல சமயங்களிலும் கேட்க நேர்ந்திருந்தாலும், படத்தைக் காணும் வாய்ப்பு சமீபத்தில்தான் கிடைத்தது.
தகழி சிவசங்கரன் பிள்ளை என்னும் மகத்தான இலக்கிய புருஷன் படைத்த நாவல்தான் செம்மீன் படத்தின் கதை, திரைக்கதை, ஜீவன் எல்லாம். தகழி, செம்மீன் நாவலை இருவதே நாட்களில் எழுதிமுடித்தாராம். பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த நாவல், தமிழில் சுந்தர ராமசாமி மொழிபெயர்த்துள்ளார்.
மலையாள சினிமாவிற்கு மணிமகுடம் அளித்த இந்த செம்மீன் பட DVDயை திரும்பத் திரும்பப் போட்டுப்பார்த்தேன்... ஏன், படம் load ஆகவில்லையா, கதை புரியவில்லையா என்று கேட்காதீர்கள். ஓரளவு புரிந்த மலையாளமும், ஆங்கில subtitlesம் விளக்காத சில உண்மைகளை அறிந்து தெளிவு பெறவேண்டி, செம்மீன் படத்தை நினைவுகூறும் மலையாள அன்பர்கள் சிலரிடமும் கேட்டுப்பார்த்தேன்... என் மனதை வாட்டியெடுத்த அந்தக் கேள்வி இதுதான். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி முடிவில் ஒரு மீனைக் காண்பிக்கிறார்களே.. எந்த வகையில் கதை, ‘செம்மீன்’ என்ற டைட்டிலை ஜஸ்டிஃபை பண்ணுகிறது என்ற எனது கேள்வி உங்களுக்கெல்லாம் சில்லியாகப் பட்டாலும், என் இந்தக் கேள்விக்கு இங்கு இருக்கும் என் மலையாளி நண்பர்கள் ஒருவரிடமும் பதிலில்லாததாலேயே, இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.
‘ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம்’ என்று நம் வாலி சொன்ன வார்த்தைகளின் நிஜத்தை படகோட்டி காட்டியதோ இல்லையோ, செம்மீன் படம் கடலோர மீனவர் சமூக வாழ்க்கையைத் துல்லியமாகச் சித்தரிக்கிறது;
பெற்றோர் கருத்தம்மாவின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் - காதலன் பரீக்குட்டி ஒரு முஸ்லிம் என்பதாலும், கருத்தம்மாவின் தந்தையின் பணத்தாசையினாலும்! பெற்றோரின் வற்புறுத்தலில் தன் காதலைத் துறக்கிறாள் கருத்தம்மா. வீட்டார் பார்த்துவைத்த பழனியைக் கரம் சேர்த்து இல்வாழ்கையில் புகுகிறாள். பரீக்குட்டி அவள் பிரிவால் வாடி வதங்குகிறான் (இன்றைய ‘காதல்’ படம் வரை ஆண்கள் நிலைதான் பரிதாபத்திற்குரியது...). பழைய காதல் பற்றிய வதந்திகளுக்கு இடையிலும் கருத்தம்மா-பழனி வாழ்க்கை ஓஹோ என்றில்லையென்றாலும் சுமுகமாகவே செல்கிறது. இதற்கிடையில் கணவன் நடுக்கடலில், மீன் பிடிக்கப்போயிருக்கும் ஒரு இரவில், கருத்தம்மாவும், பரீக்குட்டியும் சந்தர்ப்பவசத்தால் சந்திக்க நேர, அந்தத் தருணத்தில் மீண்டும் மலர்ந்த காதல் அவர்களை ஒன்றாக்குகிறது, அதே காட்சியின் தொடர்ச்சியாக, தன்னந்தனியனாய் ஒரு சுறா மீனைப்பிடிக்கப் போன கணவன் ஆழிச்சுழலில் சிக்குவதையும் காட்டுகிறார்கள். அடுத்துவந்த கடைசி காட்சியில், மரணத்தில் இணைந்த காதல் ஜோடிகளாக கருத்தம்மாவும், பரீக்குட்டியும் கடற்கரையோரம் கிடக்க... அவர்களுக்கு சற்றே தொலைவில் ஒரு சுறாமீனும் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கிறதாகக் காட்சி முடிகிறது.
தகழி சிவசங்கரன் பிள்ளையின் இக்காவியத்திற்கு ராமு காரியாத் திரைவடிவம் கொடுத்திருந்தாலும், தேசிய அளவில் செம்மீன் படம் மூலம் மலையாள சினிமாவை பேசவைத்தக் காரண கர்த்தாக்களாக இருந்த மூன்று மலையாளிகள் அல்லாதாரின் பங்கினையும் குறிப்பிட்டாக வேண்டும் - மாக்கஸ் பார்ட்லேவின் ஒளிப்பதிவும், ஹ்ருஷிகேஷ் முகர்ஜியின் ஒலிப்பதிவும் (எடிட்டிங்) மற்றும் செம்மீன் திரைக்காவியத்தின் ஜீவனோடு ஐக்கியமான சலீல் சவுத்ரியின் இசையும்.
மற்றுமொரு மலையாளி அல்லாதாரும் செம்மீன் திரைக்காவியத்தின் சிறப்பிற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்... அவர்தான் மன்னா டே. அவர் பாடிய ‘மானஸ மைனி வரு’ பாடல், கேரளத்தில் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவெங்கிலும் மற்றும் இலங்கைத் தமிழர் மத்தியிலும் அதிகம் ரசித்துக் கேட்கப்பட்ட பாடலாக விளங்கியது. உணர்ச்சிகரமான அந்தப் பாடலில் அதிகம் ஈடுபட்டுப் பாடிய மன்னா டே அவர்களினால் எப்படி ஒரு மலையாளப் பாடலை அதுவும் அதன் ஜீவன் குலையாமல் எப்படிப் பாடமுடிந்தது என்று ஆச்சரியத்தோடு பார்த்தனர். ஆரம்பத்தில், ரெக்கார்ட்டிங் முடிந்துவிட்டு, வீட்டில் செம்மீன் பாடலைப் பாடிய போது, மன்னா டேயின் மகள் கேட்டாளாம் அது என்ன மொழிப்பாடல் என்று. மன்னா டே, அப்பாடல் மலையாள மொழி என்று சொன்னதை நம்பாத அவர் மகள், மீண்டும் அப்பாடலை அவள் அம்மா முன்பாகப் பாடி உறுதிசெய்தபின்னரே நம்பினாளாம். நிறையபேருக்குத் தெரியாத ஒரு விஷயமும் உண்டு.. மன்னா டேயின் துணைவியார் சுலோசனா ஒரு மலையாளி என்பது.
மன்னா டேயின் ரசிகர் எண்ணிக்கை என்னதான் கூடினாலும், அவர் ஏன் முகேஷ், முகமது ரஃபி, கிஷோர் குமார் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்பது எனக்கு விளங்காததாகவே இருக்கிறது. இரவு நேரம், கடற்கரையோர மணற்பரப்பு, காதலியின் பிரிவில் வாடும் காதலன் பரிக்குட்டியாக சோகம் ததும்பும் முகத்துடன் மது பாடுவதுபோல் அமைந்த வயலார் ராம வர்மாவின் வரிகளில் வந்த இந்தப் பாடலும், காட்சியும் காலத்தால் அழிக்க முடியாத திரைப்படைப்புகளில் ஒன்று.
மானஸ மைனே வரு
மதுரம் நுள்ளித் தரு
நின் அரும பூவாதிகளில் தேடுவதாரே.. ஆரே (மானஸ மைனே...)
நிலாவிண்டெ நாட்டில் நிஷாகந்திப் பூத்தல்லோ
களிக் கூட்டுகாரனெ மறன்னு போயோ (மானஸ மைனே...)
கடலிலே ஓலவும் கரலிலே மோஹவும்
அடங்குகில்லோமனே அடங்குகில்லா (மானஸ மைனே...)
லதா மங்கேஷ்கருடன் சோரி சோரி படத்தில் பாடிய ‘ஏ ராத் பீகி பீகி...’ ‘ஆஜா சனம்...’ பாடல்களும் மற்றும் ஸ்ரீ420 படத்தில் ‘ப்யார் ஹுவா இக்ரார் ஹுவா...’ பாடலும் மன்னா டே அவர்கள் பாடிய என் உளங்கவர்ந்த மற்ற பாடல்கள்.
Links:
செம்மீன் படம் பற்றிய விக்கிப்பீடியா தகவல்
மன்னா டே பற்றிய விக்கிபீடியா தகவல்
மன்னா டே அவர்களின் வலைத்தளம்
செம்மீன் படம், கதை பற்றி வலைப்பூ ஒன்றில்