நவராத்திரி வந்தாச்சு. நேற்றே கொலு பொம்மைகளை எல்லாம் முறையாக ஸ்டாண்டில் அடுக்கிவைத்தாகிவிட்டது. இனி 'பார்க்'தான் பாக்கி.
ஆரம்பத்தில், எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் கிடையாதாம். எண்பதுகளின் துவக்கத்தில், மைலாப்பூர் சோலையப்ப முதலித்தெருவில், பிராமண குடும்பங்கள் நெருக்கமாக வாழும் ஒண்டுக்குடித்தனம் ஒன்றில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில்தான் முதன்முதலாக கொலு வைத்தோமாம். மூன்றாவது படிக்கும் அந்தக் காலக்கட்டத்தில், பக்கத்து வீடுகளில் எல்லாம் கொலுவைப்பதைப் பார்த்துவிட்டு, நான் ரொம்பவும் அழுது அழிச்சாட்டியம் பண்ணியதன் பலனாகத்தான் எங்கள் வீட்டிலும் கொலு பொம்மைகள் வாங்க முடிவுசெய்ததாக ஒவ்வொரு வருஷமும் அம்மாவும் அப்பாவும் நினைவுகூறுவார்கள்.
அருபடை வீட்டு முருகன், தசாவதாரம், கல்யாண செட் போன்ற பரவலாக அறியப்பட்ட பொம்மைகள் உட்பட, ஒவ்வொரு வருடமும் கணிசமான பொம்மைகள் வாங்கினோம். இப்படியாக, முதலில் மூன்று படிகள் என ஆரம்பித்தது, ஐந்தாரு வருஷங்களில் ஒன்பது படிகட்டுவரை முன்னேறியது. அப்புறம், தொடர்ந்து பொம்மைகள் வாங்குவது குறைந்தபோதும்கூட, ஒன்பது படிகளுக்கு பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கிவைத்து, மணலைப் பரப்பி அதில் ஒரு சிறிய 'பூங்கா மாதிரி' உருவாக்கி அழகு பார்ப்பததற்கும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், உறவினர், உடன் பணிபுரியும் தோழர்கள் என பலரை கொலுபார்க்க வீட்டிற்கு அழைப்பதிலும் குறைவில்லை.
ஆனால் காலப்போக்கில், பெரும்பான்மையான சுற்றத்தினர் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்ற காரணத்தினாலோ, புதிய அக்கம் பக்கத்தினர் அந்த அளவிற்கு நெருங்கிப் பழகுதலில் ஆர்வம் காட்டாததினாலோ (இதுவந்து 18...அப்படின்னா...பக்கத்து வீடு 19 ஆக இருக்கலாம்...எதற்கும் நீங்களே கேட்டுக் confirm பண்ணிக்கிடுங்க.....), தற்போதைய வாழ்க்கையின் fast track கலாச்சாரத்தினாலோ, தொலைதூரத்தில் போன உறவினர், நண்பர்களினாலோ, தொலைந்து போன ஆர்வத்தினாலோ, கடந்தகால அளவிற்கு கொலு, பொமைகள், சுண்டல், பட்டுப்பாவாடை தாவணி, 'இதோப்பாருமா, ஏதாவது சின்னப் பாட்டாவது பாடிட்டுத்தான் போகணும்' - போன்றவை அண்மைக்காலங்களில் காணமுடிவதில்லை.
நவராத்திரி கொலு சம்பந்தமாக இரண்டு சினிமாப் பாடல்களைச் சொல்லலாம் - புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்......(இரு கோடுகள்).மற்றொன்று, ராகவனே ரமணா ரகுநாதா...(இளமைக் காலங்கள்).
அந்த 7 நாட்கள் படத்தில் கூட ஒரு காட்சி உண்டு. இசையமைப்பாளராகும் ஆர்வத்தில் இருக்கும் பாக்யராஜிடம், தன் காதலை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டி ஆர்மோனியப் பெட்டியுடன் இருக்கும் பொம்மையையும், இளம்பெண் பொம்மையையும் நெருக்கமாக வைப்பார் அம்பிகா.........அந்தக் காட்சியெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? இல்லை, நிஜ வாழ்க்கையில் பல கடந்தகாலக் காட்சிகள் படிப்படியாக வந்து வந்து போகிறதா.....?
கவிதையே தெரியுமா? அல் கோபார்-லிருந்து ரியாத்-ற்கு வந்த புதிதில், தமிழர்களைக் காண்பதே எனக்கு ரொம்ப அரிதான ஒன்றாக இருந்தது. கம்பெனியின் குடியிருப்புப் பகுதியில், பேருக்கு ஒரு தமிழரும் இல்லை (இருந்திருந்தாலும், என் கண்ணில் படவில்லை). அலுவலகம் - கம்பெனி பஸ் - கேம்ப் என இருந்த அன்றைய அன்றாட வாழ்வில், குமுதம், ஆனத்த விகடன், தினசரிகள் எதுவும் கிடைக்காத குறையை என் அலுவலகக் கணினியில் இருந்த இண்டெர்நெட் வசதி பெருமளவிற்கு சரி செய்தது. எனினும், நேரடியாக கதைக்க ஒரு தமிழன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் ஆழ்மனதில் ஊறி இருந்தது. தப்பித்தவறி ஒரு தமிழன் எதிர்பட்டாலும், முதல் சந்திப்பிலேயே அவர்களிடம் ரொம்ப நெருக்கமாகப் பழகி, அரசியல், சினிமா, சொந்த விஷயங்கள் எனப் பரவலாகப் பல விஷயங்களைப் பற்றியும் பேசினாலும், அவர்களது இலக்கிய ஆர்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவாவும் கூடவே இருந்தது - 'சார்...நீங்க கவிதை எல்லாம் எழுதுவீர்களா?' என்று சிலரைக் கேட்கவைத்தது; எழுதுவீர்களா என்பதற்குப் பதிலாக 'வாசிப்பீர்களா?' என்றாவது கேட்டிருக்கலாம் என்று தோன்றும்.
இரண்டு வாரம் முன்னர், ஒரு BPO/கால் செண்டர் வேலைக்கான ஒரு நேர்காணலில் பங்கு பெறச் சென்றிருந்தபோது, ஜேசுராஜ் என்பவர் (என்போலவே நேர்காணலுக்காக வந்தவர்) நன்கு அறிமுகமானார். மடிப்பாக்கம்தானாம் அவரும். ஆங்கிலத்தில் MA பட்டம் என்றார். பெர்னாட் ஷாவின் ஆப்பிள் கார்ட் படித்திருக்கிறேன் என்றேன் (ரொம்பப் பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயம் வேறு எனக்கு). போஸ்ட் மாடர்னிஸம் பற்றி நிறைய பேசினார். மாடர்ன் ஆர்ட் பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். கர்னாடிக், மேற்கத்திய இசை, நம்ப ஊர் நாட்டுபுற பாடல்கள் ...என இசையிலும் விட்டுவைக்கவில்லை. 'எனக்கு தமிழ் சினிமா பாடல்னா இஷ்டம்; அதுவும் இசைஞானி இளையராஜான்னா ஒரு special interest உண்டு' என்றேன். உடனே, `Mozart Meets India' கேட்டிங்களா என்றார். அப்புறம், அகிரா குரேசவா, சாப்ளின்...என சொல்லிக்கொண்டே போனார். Dramatisation, Visualisation, Charecterisation....அவரது ரசனைகள் பற்றி எல்லாம் நிறைய சொன்னார். 'பெர்னார்ட் ஷாவின் கதாபாத்திரங்களிலேயே உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்' என்று கேட்டார். அதிகம் யோசிக்கவில்லை நான் - ப்ளண்ட்ஸ்க்ளை (Bluntschli) என்றேன். 'அது Apple Cartல கிடையாதே; Arms and the Manல் வரும் கதாபாத்திரம்' என்றார். நல்லவேளை, Arms and the Man மங்கலான என் நினைவுகளில் இருந்தமையால் நான் தப்பித்துக்கொண்டேன்.
மின்னஞ்சல் முகவரியும், மொபைல் எண்ணணயும் பறிமாறிக்கொண்டோம். போகிறபோக்கில், ஒரு இலக்கியக்கூட்டதிற்கு என்னை அழைத்தார் (வெறும் கையோடு வராதீர்கள், குறைந்த பட்சம் ஒரு கவிதையோடு வாருங்கள்!). கவிதை வாசிப்பு மற்றும் அதன் appreciation வேறு! கவிதை எழுத நேரமும் இல்லை, moodம் இல்லை. எப்போதோ கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று... (திண்ணை இணைய இதழில் 5-6 மாதங்களுக்கு முன்பாக வெளியான கவிதை)...அதையே பிரதி எடுத்து வைத்தேன், கவிச்சோலைக்குக் கொண்டு செல்ல..........ஆனால், வழக்கமான எனது சோம்பேரித்தனம் விளையாடிவிட்டது. வீட்டிலேயே இருந்து பொழுதைக் கழித்துவிட்டேன்.
இன்று காலை, என் மகளை ஸ்கூலிற்கு கொண்டுபோய் விடும் வழியில், பொன்னியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஜேசுராஜை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. அவசரஅவசரமாக ஒரு 'Hi' சொல்லிவிட்டு, அவரை கடந்து என் ஹோண்டா ஆக்டிவாவில் பறந்தேன். என் அவசரத்தைப் புரிந்து கொண்டிருப்பாரா...? இல்லை, என் அசிரத்தையை....?
திண்ணை - issue date: Thursday April 27, 2006 இரண்டு கவிதைகள்
காத்திருத்தல்
நீ வரும் பாதையில் காத்திருந்த காலங்கள் நீ கடந்து சென்ற பின்னர் நகரவிடாத பொழுதுகளாய் மாறி இம்சைதரும் கணங்கள். இப்போதெல்லாம் அப்பாதையில் நீ வருவதில்லை. நானும் காத்திருப்பதில்லை.. எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை. யாரோ யாருக்காகவோ காத்திருக்கத்தான் செய்கிறார்கள் பாதை நெடுகிலும். *** நிறுத்தமில்லாப் பயணம்
நீ இருக்கும் பேருந்தில் இறைச்சல் இம்சைகள் தெரிவதில்லை. ஆள்கூட்ட நெரிசல் பழகிப்போயிருக்கும் உனக்கும். இருந்தும், எல்லாமே தீர்மானிக்கப்பட்ட பொழுதுகளாய் இறங்கிச்செல்வாய் உன் நிறுத்தம் வந்ததும். எப்போதோ நிகழப்போகும் நம் சந்திப்புகளிற்கு ஒத்திகை பார்த்துக் கொள்பவனாய் நான் ***
பின் குறிப்பு - ஒருவரது மொபைல் ரிங்டோன் தேர்வு மூலமே அவர் ரசனன பற்றிய முழு முடிவிற்கு வரலாம் என்று யாராவது சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஜேசுராஜ் தனது மொபைலில் வைத்திருக்கும் இசை ஒலி - மை நேம் இஸ் பில்லா, வாழ்கை எல்லா, நானும் பாக்காத ஆளில்லே, போகாத ஊரில்லே ஐயா, நல்ல நண்பன், இல்லை என்றால் எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா.......ஆ.......!
நேற்றைய பொழுது..... மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது எதுவும் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் சொன்னாராம். சென்னையின் புறநகர் சாலைகளைப் பார்த்திருந்தால் அந்த மாதிரி சொல்லியிருக்க மாட்டார். குடியிருப்புப் பகுதிகளில் ரோடு போடுவதற்காக அங்காங்கே இறைந்திருக்கும் கருங்கல் ஜல்லியும், சாலையில் பரவலாகக் காணப்படும் மேடு பள்ளங்களும், பாதசாரிகளாகட்டும், வாகனத்தில் பயணிப்போராகட்டும், எல்லோருமே மிகுந்த சிரமத்தைத்தான் தருகிறது. அரசாங்கங்கள் வருகின்றன போகின்றன; ஆட்சியாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள்...சாலைகளின் நிலை மட்டும் அன்று கண்ட மேனியாகவே உள்ளது. ஒரு புரட்சிகர மாற்றம் தேவை....ஜனநாயகத்தில் இதற்கான் தீர்வு கிடையாது...என்றெல்லாம் எண்ணுகிறீர்களா?
Adam Michnik என்ன சொல்கிறார் தெரியுமா....as a rule, dictatorships guarantee safe streets and terror of the doorbell. In democracy the streets may be unsafe after dark, but the most likely visitor in the early hours will be milkman.
அவர் சொல்வதும் நீங்கள் நினைப்பது, ஒரு புறமிருக்கட்டும், நான் வேறு விஷயங்களைப் பற்றியே சொல்ல வந்தேன். மாற்றங்கள் என நான் சொல்வதெல்லாம், ஏதோ இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தேறிய ஒன்றாகச் சொல்லவரவில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம், கடந்த பத்து பதினைந்து வருடங்களாகவே மெதுவாகவும் வேகமாகவும் நிகழ்ந்தவை. 1980களின் துவக்க காலத்தில் சென்னையின் சாயல்களே தெரியாத புறநகர்ப் பகுதிகள் இன்று, மெட்ரோவின் பெருநிழலின் கீழ் ஆர்ப்பாட்டமாக உள்ளது. நகரமயமாதலில், கிராமங்களே தங்கள் சுயத்தை இழக்கும் போது இந்த புறநகர்ப் பகுதிகள் வெகுவேகமாக ஹைடெக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்வதில் ஆச்சர்யப்படுவதற்கில்லைதான். ஆனால், பெருகிவரும் புதிய புதிய ஃபிளாட்களும், அப்பார்ட்மெண்ட்களும், சூப்பர் மார்கெட் கட்டிடங்களுக்கும் நடுவில், பழையகால நினைவுகளைத் தட்டியெழுப்புவதற்காகவே இருப்பதுபோல மாறாத பழமையுடன் காணப்படும் வீடுகளும், கடைகளும், அவ்வப்போது என் கண்ணில் படத்தான் செய்கிறது. ஆரம்பகால மடிப்பாக்கத்தின் சான்றுகள் அவை.
இன்று மடிப்பாக்கத்தில், கிரிக்கெட் விளையாட வசதியாக ஒரு பிளே க்ரவுண்ட் உண்டா? 1980களின் துவக்க காலத்தில், மிகச்சில வீடுகளே இருந்ததால், விளையாடுவதற்கு ஏதுவாக ஏகப்பட்ட கிரிக்கெட் கிரவுண்ட் வாய்த்தது. எண்ணற்ற அணிகளும், ஆர்வத்தோடு விளையாடுவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. காலைவேளைகளில், கார்த்திகேயபுரத்தில் கிரிக்கெட் கோச்சிங் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும்....அது அந்தக் காலம்!
அது எந்தக் காலம்..? சைதாப்பேட்டைக்கும் மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலுக்கும் இடையே M11 என்ற மினி பஸ் (மடிப்பாக்கத்தினுள் நுழைந்த முதல் பேருந்து என நினைக்கிறேன்) ரொம்ப ரேராக ஷண்டிங் அடித்த காலம். ஏரோப்பிளேனை வேடிக்கைப் பார்ப்பது போல, கிரிக்கெட் விளையாடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, வெகுதொலைவில் பார்த்த அந்தப் பேருந்து அருகில் வரும்போது வேடிக்கை பார்ப்போம்...நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா, இல்லை, நம்ம வீட்டுக்குத்தான் யாராவது வருகிறார்களா என்று உற்று நோக்குவோம். எப்படியும் பேருந்திலிருந்து ஒரிரு புதியவர்கள் (strangers) இறங்கி ஊருக்குள் வரும்போது எங்களிடம், `தம்பி, இந்த அட்ரஸ் எங்க இருக்கு’ என்று விசாரிக்காமல் செல்லமாட்டார்கள். எங்களுக்குப் புரிந்துவிடும், அவர் சாதாரண ஸ்ட்ரேஞ்சர் அல்லர்; ஏரியாவில் புதிதாகப் பிளாட் வாங்கியவர், அல்லது, வாங்கப்போகுபவர் என்ற எங்கள் யூகம் தொண்ணூரு சதவிதம் சரியாகத்தான் இருக்கும். அப்படி விசாரித்து வந்தவர்கள் பலர் இன்று, மாடி மேல் மாடி கட்டி, குடும்பமும் விஸ்தாரமாய், புதிய தலைமுறைகள் உருவாகி...அப்பப்பா!...என்னே மாற்றங்கள் நம் மடிப்பாக்கத்தில், இன்று காணும்போது! 1983-84வாக்கில், வேளச்சேரி வழியாகப் பேருந்தைக் கொண்டுவர பிரம்மப் பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது. குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்து, அதற்கு ஆள் சேர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வரவழைத்து, சினிமா நடிகை நளினியை சிறப்பு விருந்தினராக அழைத்து (நம்ப ஊர் மக்களைத் திரட்ட பட்டபாடு இருக்கே...!)..ஒரு பெரிய ‘மாஸ்’ காட்டி, ரொம்பவும் லோல்பட்டபிறகுதான் வேளச்சேரி வழியாக பஸ் வர ஆரம்பித்தது என்று தோன்றுகிறது.
இந்த நினைவுகளையெல்லாம் அசை போட்டபடி நடந்து கொண்டிருக்கையில், கூட்ரோடு செல்லும் வழியில் ஒரு டேபிள் டென்னிஸ் கிளப் என்னை ஈர்த்தது (மடிப்பாக்கத்தில் மொத்தம் 3 டேபிள் டென்னிஸ் கிளப்புகள் உள்ளதாம்). விளையாடுபவர்கள் பெரும்பாலும் சிறுசுகள்தாம். சற்றும் தாமதிக்காமல் என்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். ஒரு 5 வருடத்திற்கு முன்னால் அதிகமாக நான் டேபிள் டென்னிஸ் விளையாடி இருந்தாலும், முறைப்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை நேற்றுதான் கற்றுக்கொண்டேன். backhand, forehand, push, counter, topspin, backspin, smash, block, lob - offensive, defensive என பலவையான strokesஐ மிகப் பொருமையாகச் சொல்லிக்கொடுதார்கள். ஆடும் முறைகளை, நுணுக்கங்களை ஆரம்ப காலந்திலேயே (beginners ஆக இருக்கும்போதே) கற்றுக் கொள்வதுதான் சிறந்தது. என்போல, தாந்தோன்றித்தனமாகத் துவங்கி (selfstyled start), முறையான் பயிற்சியின்றி ஓரளவு முன்னேறியவர்கள் copy book styleல் விளையாட முயற்சிக்கும் போது துவக்கத்தில் சிரமமாகத்தான் இருக்குமாம். ஏதோ, ஒரு வழியாக முதல் நாள் பயிற்சி முடிந்து கிளம்புகையில், ஒரு game ஆடிவிட்டுப் போகலாமே என்றார் பயிற்சியாளர். அதன்படி, விக்கி என்கிற விக்னேஷ்வரனுடன் விளையாடி 11-7, 16-14 என்று நேர் செட்டில் பெற்ற எனது வெற்றியை பற்றி வீட்டில் சொன்னேன். விக்கி ஸாருக்கு எவ்வளவு வயசு என்றாள் என் மனைவி. 12 வயசு, 5ஆவது படிக்கிறான் என்றேன். என்னங்க, பாவம் சின்னப் பையன்..நீங்க அவனுக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டேன். வேறு என்னத்தைச் சொல்ல...கிளப்பில் சேர்ந்த முதல் நாளே நான் தோற்று விடக்கூடாது என்று, அவன் தான் விட்டுக் கொடுத்தான் என்று சொல்லலாமா..?