நவராத்திரி....கொலு, சுண்டல், பட்டுப்பாவாடை தாவணி..
நவராத்திரி வந்தாச்சு. நேற்றே கொலு பொம்மைகளை எல்லாம் முறையாக ஸ்டாண்டில் அடுக்கிவைத்தாகிவிட்டது. இனி 'பார்க்'தான் பாக்கி.
ஆரம்பத்தில், எங்கள் வீட்டில் கொலு வைக்கும் வழக்கம் கிடையாதாம். எண்பதுகளின் துவக்கத்தில், மைலாப்பூர் சோலையப்ப முதலித்தெருவில், பிராமண குடும்பங்கள் நெருக்கமாக வாழும் ஒண்டுக்குடித்தனம் ஒன்றில் வாழ்ந்து வந்த காலகட்டத்தில்தான் முதன்முதலாக கொலு வைத்தோமாம். மூன்றாவது படிக்கும் அந்தக் காலக்கட்டத்தில், பக்கத்து வீடுகளில் எல்லாம் கொலுவைப்பதைப் பார்த்துவிட்டு, நான் ரொம்பவும் அழுது அழிச்சாட்டியம் பண்ணியதன் பலனாகத்தான் எங்கள் வீட்டிலும் கொலு பொம்மைகள் வாங்க முடிவுசெய்ததாக ஒவ்வொரு வருஷமும் அம்மாவும் அப்பாவும் நினைவுகூறுவார்கள்.
அருபடை வீட்டு முருகன், தசாவதாரம், கல்யாண செட் போன்ற பரவலாக அறியப்பட்ட பொம்மைகள் உட்பட, ஒவ்வொரு வருடமும் கணிசமான பொம்மைகள் வாங்கினோம். இப்படியாக, முதலில் மூன்று படிகள் என ஆரம்பித்தது, ஐந்தாரு வருஷங்களில் ஒன்பது படிகட்டுவரை முன்னேறியது. அப்புறம், தொடர்ந்து பொம்மைகள் வாங்குவது குறைந்தபோதும்கூட, ஒன்பது படிகளுக்கு பொம்மைகளை நேர்த்தியாக அடுக்கிவைத்து, மணலைப் பரப்பி அதில் ஒரு சிறிய 'பூங்கா மாதிரி' உருவாக்கி அழகு பார்ப்பததற்கும், அக்கம் பக்கத்திலுள்ளவர்கள், உறவினர், உடன் பணிபுரியும் தோழர்கள் என பலரை கொலுபார்க்க வீட்டிற்கு அழைப்பதிலும் குறைவில்லை.
ஆனால் காலப்போக்கில், பெரும்பான்மையான சுற்றத்தினர் பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்து சென்ற காரணத்தினாலோ, புதிய அக்கம் பக்கத்தினர் அந்த அளவிற்கு நெருங்கிப் பழகுதலில் ஆர்வம் காட்டாததினாலோ (இதுவந்து 18...அப்படின்னா...பக்கத்து வீடு 19 ஆக இருக்கலாம்...எதற்கும் நீங்களே கேட்டுக் confirm பண்ணிக்கிடுங்க.....), தற்போதைய வாழ்க்கையின் fast track கலாச்சாரத்தினாலோ, தொலைதூரத்தில் போன உறவினர், நண்பர்களினாலோ, தொலைந்து போன ஆர்வத்தினாலோ, கடந்தகால அளவிற்கு கொலு, பொமைகள், சுண்டல், பட்டுப்பாவாடை தாவணி, 'இதோப்பாருமா, ஏதாவது சின்னப் பாட்டாவது பாடிட்டுத்தான் போகணும்' - போன்றவை அண்மைக்காலங்களில் காணமுடிவதில்லை.
நவராத்திரி கொலு சம்பந்தமாக இரண்டு சினிமாப் பாடல்களைச் சொல்லலாம் - புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்......(இரு கோடுகள்). மற்றொன்று, ராகவனே ரமணா ரகுநாதா...(இளமைக் காலங்கள்).
அந்த 7 நாட்கள் படத்தில் கூட ஒரு காட்சி உண்டு. இசையமைப்பாளராகும் ஆர்வத்தில் இருக்கும் பாக்யராஜிடம், தன் காதலை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டி ஆர்மோனியப் பெட்டியுடன் இருக்கும் பொம்மையையும், இளம்பெண் பொம்மையையும் நெருக்கமாக வைப்பார் அம்பிகா.........அந்தக் காட்சியெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? இல்லை, நிஜ வாழ்க்கையில் பல கடந்தகாலக் காட்சிகள் படிப்படியாக வந்து வந்து போகிறதா.....?
2 Comments:
பாரதிய நவீன இளவரசன்,
எல்லாமே மாறிட்டு தான் வருது. ஆனால் கொலு எல்லாம் இருக்கு. மக்கள் இன்னும் அதை மறக்கல.
பக்கத்து வீட்டுக்கும் எதிர் வீட்டுக்கும் இருக்கர 'distance' அதிகம் ஆவரது உண்மை தான்.
விரும்பத்த்காத மாற்றங்களில் இதுவும் ஒன்று;
Arumaiyaana post Athimber! Me got a flashback after reading your post. What you say is true. The degree of narrowness that city life has reached now is so bad. And you've explained that in your very own stlye well.
Post a Comment
<< Home