பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, September 14, 2006

நேற்றைய பொழுது.....

மாற்றம் என்ற சொல்லைத் தவிர மாறாதது எதுவும் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் சொன்னாராம். சென்னையின் புறநகர் சாலைகளைப் பார்த்திருந்தால் அந்த மாதிரி சொல்லியிருக்க மாட்டார். குடியிருப்புப் பகுதிகளில் ரோடு போடுவதற்காக அங்காங்கே இறைந்திருக்கும் கருங்கல் ஜல்லியும், சாலையில் பரவலாகக் காணப்படும் மேடு பள்ளங்களும், பாதசாரிகளாகட்டும், வாகனத்தில் பயணிப்போராகட்டும், எல்லோருமே மிகுந்த சிரமத்தைத்தான் தருகிறது. அரசாங்கங்கள் வருகின்றன போகின்றன; ஆட்சியாளர்கள் வருகிறார்கள் போகிறார்கள்...சாலைகளின் நிலை மட்டும் அன்று கண்ட மேனியாகவே உள்ளது. ஒரு புரட்சிகர மாற்றம் தேவை....ஜனநாயகத்தில் இதற்கான் தீர்வு கிடையாது...என்றெல்லாம் எண்ணுகிறீர்களா?

Adam Michnik என்ன சொல்கிறார் தெரியுமா....as a rule, dictatorships guarantee safe streets and terror of the doorbell. In democracy the streets may be unsafe after dark, but the most likely visitor in the early hours will be milkman.

அவர் சொல்வதும் நீங்கள் நினைப்பது, ஒரு புறமிருக்கட்டும், நான் வேறு விஷயங்களைப் பற்றியே சொல்ல வந்தேன். மாற்றங்கள் என நான் சொல்வதெல்லாம், ஏதோ இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தேறிய ஒன்றாகச் சொல்லவரவில்லை. இந்த மாற்றங்கள் எல்லாம், கடந்த பத்து பதினைந்து வருடங்களாகவே மெதுவாகவும் வேகமாகவும் நிகழ்ந்தவை. 1980களின் துவக்க காலத்தில் சென்னையின் சாயல்களே தெரியாத புறநகர்ப் பகுதிகள் இன்று, மெட்ரோவின் பெருநிழலின் கீழ் ஆர்ப்பாட்டமாக உள்ளது. நகரமயமாதலில், கிராமங்களே தங்கள் சுயத்தை இழக்கும் போது இந்த புறநகர்ப் பகுதிகள் வெகுவேகமாக ஹைடெக் கலாச்சாரத்தைத் தழுவிக் கொள்வதில் ஆச்சர்யப்படுவதற்கில்லைதான். ஆனால், பெருகிவரும் புதிய புதிய ஃபிளாட்களும், அப்பார்ட்மெண்ட்களும், சூப்பர் மார்கெட் கட்டிடங்களுக்கும் நடுவில், பழையகால நினைவுகளைத் தட்டியெழுப்புவதற்காகவே இருப்பதுபோல மாறாத பழமையுடன் காணப்படும் வீடுகளும், கடைகளும், அவ்வப்போது என் கண்ணில் படத்தான் செய்கிறது. ஆரம்பகால மடிப்பாக்கத்தின் சான்றுகள் அவை.

இன்று மடிப்பாக்கத்தில், கிரிக்கெட் விளையாட வசதியாக ஒரு பிளே க்ரவுண்ட் உண்டா? 1980களின் துவக்க காலத்தில், மிகச்சில வீடுகளே இருந்ததால், விளையாடுவதற்கு ஏதுவாக ஏகப்பட்ட கிரிக்கெட் கிரவுண்ட் வாய்த்தது. எண்ணற்ற அணிகளும், ஆர்வத்தோடு விளையாடுவோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. காலைவேளைகளில், கார்த்திகேயபுரத்தில் கிரிக்கெட் கோச்சிங் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும்....அது அந்தக் காலம்!

அது எந்தக் காலம்..? சைதாப்பேட்டைக்கும் மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோயிலுக்கும் இடையே M11 என்ற மினி பஸ் (மடிப்பாக்கத்தினுள் நுழைந்த முதல் பேருந்து என நினைக்கிறேன்) ரொம்ப ரேராக ஷண்டிங் அடித்த காலம். ஏரோப்பிளேனை வேடிக்கைப் பார்ப்பது போல, கிரிக்கெட் விளையாடுவதை ஒரு கணம் நிறுத்திவிட்டு, வெகுதொலைவில் பார்த்த அந்தப் பேருந்து அருகில் வரும்போது வேடிக்கை பார்ப்போம்...நமக்குத்தெரிந்தவர்கள் யாராவது வருகிறார்களா, இல்லை, நம்ம வீட்டுக்குத்தான் யாராவது வருகிறார்களா என்று உற்று நோக்குவோம். எப்படியும் பேருந்திலிருந்து ஒரிரு புதியவர்கள் (strangers) இறங்கி ஊருக்குள் வரும்போது எங்களிடம், `தம்பி, இந்த அட்ரஸ் எங்க இருக்கு’ என்று விசாரிக்காமல் செல்லமாட்டார்கள். எங்களுக்குப் புரிந்துவிடும், அவர் சாதாரண ஸ்ட்ரேஞ்சர் அல்லர்; ஏரியாவில் புதிதாகப் பிளாட் வாங்கியவர், அல்லது, வாங்கப்போகுபவர் என்ற எங்கள் யூகம் தொண்ணூரு சதவிதம் சரியாகத்தான் இருக்கும். அப்படி விசாரித்து வந்தவர்கள் பலர் இன்று, மாடி மேல் மாடி கட்டி, குடும்பமும் விஸ்தாரமாய், புதிய தலைமுறைகள் உருவாகி...அப்பப்பா!...என்னே மாற்றங்கள் நம் மடிப்பாக்கத்தில், இன்று காணும்போது! 1983-84வாக்கில், வேளச்சேரி வழியாகப் பேருந்தைக் கொண்டுவர பிரம்மப் பிரயத்தனம் பண்ணவேண்டியிருந்தது. குடியிருப்போர் நலச் சங்கம் ஆரம்பித்து, அதற்கு ஆள் சேர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எல்லாம் ஒரு பொதுக்கூட்டத்திற்கு வரவழைத்து, சினிமா நடிகை நளினியை சிறப்பு விருந்தினராக அழைத்து (நம்ப ஊர் மக்களைத் திரட்ட பட்டபாடு இருக்கே...!)..ஒரு பெரிய ‘மாஸ்’ காட்டி, ரொம்பவும் லோல்பட்டபிறகுதான் வேளச்சேரி வழியாக பஸ் வர ஆரம்பித்தது என்று தோன்றுகிறது.

இந்த நினைவுகளையெல்லாம் அசை போட்டபடி நடந்து கொண்டிருக்கையில், கூட்ரோடு செல்லும் வழியில் ஒரு டேபிள் டென்னிஸ் கிளப் என்னை ஈர்த்தது (மடிப்பாக்கத்தில் மொத்தம் 3 டேபிள் டென்னிஸ் கிளப்புகள் உள்ளதாம்). விளையாடுபவர்கள் பெரும்பாலும் சிறுசுகள்தாம். சற்றும் தாமதிக்காமல் என்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். ஒரு 5 வருடத்திற்கு முன்னால் அதிகமாக நான் டேபிள் டென்னிஸ் விளையாடி இருந்தாலும், முறைப்படி எப்படி விளையாட வேண்டும் என்பதை நேற்றுதான் கற்றுக்கொண்டேன். backhand, forehand, push, counter, topspin, backspin, smash, block, lob - offensive, defensive என பலவையான strokesஐ மிகப் பொருமையாகச் சொல்லிக்கொடுதார்கள். ஆடும் முறைகளை, நுணுக்கங்களை ஆரம்ப காலந்திலேயே (beginners ஆக இருக்கும்போதே) கற்றுக் கொள்வதுதான் சிறந்தது. என்போல, தாந்தோன்றித்தனமாகத் துவங்கி (selfstyled start), முறையான் பயிற்சியின்றி ஓரளவு முன்னேறியவர்கள் copy book styleல் விளையாட முயற்சிக்கும் போது துவக்கத்தில் சிரமமாகத்தான் இருக்குமாம். ஏதோ, ஒரு வழியாக முதல் நாள் பயிற்சி முடிந்து கிளம்புகையில், ஒரு game ஆடிவிட்டுப் போகலாமே என்றார் பயிற்சியாளர். அதன்படி, விக்கி என்கிற விக்னேஷ்வரனுடன் விளையாடி 11-7, 16-14 என்று நேர் செட்டில் பெற்ற எனது வெற்றியை பற்றி வீட்டில் சொன்னேன். விக்கி ஸாருக்கு எவ்வளவு வயசு என்றாள் என் மனைவி. 12 வயசு, 5ஆவது படிக்கிறான் என்றேன். என்னங்க, பாவம் சின்னப் பையன்..நீங்க அவனுக்கு விட்டுக் கொடுத்திருக்கலாம் என்றாள். நான் ஒன்றும் பேசாமல் நகர்ந்து விட்டேன். வேறு என்னத்தைச் சொல்ல...கிளப்பில் சேர்ந்த முதல் நாளே நான் தோற்று விடக்கூடாது என்று, அவன் தான் விட்டுக் கொடுத்தான் என்று சொல்லலாமா..?

1 Comments:

At 12:12 AM, Blogger Venky said...

Chanceee illa athimber! You pushed me into a time machine and took me through the Madippakam of the yesteryears. Good finish to that essay. Keep blogging.

 

Post a Comment

<< Home