பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Friday, September 15, 2006

கவிதையே தெரியுமா?

அல் கோபார்-லிருந்து ரியாத்-ற்கு வந்த புதிதில், தமிழர்களைக் காண்பதே எனக்கு ரொம்ப அரிதான ஒன்றாக இருந்தது. கம்பெனியின் குடியிருப்புப் பகுதியில், பேருக்கு ஒரு தமிழரும் இல்லை (இருந்திருந்தாலும், என் கண்ணில் படவில்லை). அலுவலகம் - கம்பெனி பஸ் - கேம்ப் என இருந்த அன்றைய அன்றாட வாழ்வில், குமுதம், ஆனத்த விகடன், தினசரிகள் எதுவும் கிடைக்காத குறையை என் அலுவலகக் கணினியில் இருந்த இண்டெர்நெட் வசதி பெருமளவிற்கு சரி செய்தது. எனினும், நேரடியாக கதைக்க ஒரு தமிழன் கிடைக்க மாட்டானா என்ற ஏக்கம் ஆழ்மனதில் ஊறி இருந்தது. தப்பித்தவறி ஒரு தமிழன் எதிர்பட்டாலும், முதல் சந்திப்பிலேயே அவர்களிடம் ரொம்ப நெருக்கமாகப் பழகி, அரசியல், சினிமா, சொந்த விஷயங்கள் எனப் பரவலாகப் பல விஷயங்களைப் பற்றியும் பேசினாலும், அவர்களது இலக்கிய ஆர்வத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற அவாவும் கூடவே இருந்தது - 'சார்...நீங்க கவிதை எல்லாம் எழுதுவீர்களா?' என்று சிலரைக் கேட்கவைத்தது; எழுதுவீர்களா என்பதற்குப் பதிலாக 'வாசிப்பீர்களா?' என்றாவது கேட்டிருக்கலாம் என்று தோன்றும்.

இரண்டு வாரம் முன்னர், ஒரு BPO/கால் செண்டர் வேலைக்கான ஒரு நேர்காணலில் பங்கு பெறச் சென்றிருந்தபோது, ஜேசுராஜ் என்பவர் (என்போலவே நேர்காணலுக்காக வந்தவர்) நன்கு அறிமுகமானார். மடிப்பாக்கம்தானாம் அவரும். ஆங்கிலத்தில் MA பட்டம் என்றார். பெர்னாட் ஷாவின் ஆப்பிள் கார்ட் படித்திருக்கிறேன் என்றேன் (ரொம்பப் பேசினால் குட்டு வெளிப்பட்டுவிடும் என்ற பயம் வேறு எனக்கு). போஸ்ட் மாடர்னிஸம் பற்றி நிறைய பேசினார். மாடர்ன் ஆர்ட் பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். கர்னாடிக், மேற்கத்திய இசை, நம்ப ஊர் நாட்டுபுற பாடல்கள் ...என இசையிலும் விட்டுவைக்கவில்லை. 'எனக்கு தமிழ் சினிமா பாடல்னா இஷ்டம்; அதுவும் இசைஞானி இளையராஜான்னா ஒரு special interest உண்டு' என்றேன். உடனே, `Mozart Meets India' கேட்டிங்களா என்றார். அப்புறம், அகிரா குரேசவா, சாப்ளின்...என சொல்லிக்கொண்டே போனார். Dramatisation, Visualisation, Charecterisation....அவரது ரசனைகள் பற்றி எல்லாம் நிறைய சொன்னார். 'பெர்னார்ட் ஷாவின் கதாபாத்திரங்களிலேயே உங்களை ரொம்பவும் கவர்ந்தவர் யார்' என்று கேட்டார். அதிகம் யோசிக்கவில்லை நான் - ப்ளண்ட்ஸ்க்ளை (Bluntschli) என்றேன். 'அது Apple Cartல கிடையாதே; Arms and the Manல் வரும் கதாபாத்திரம்' என்றார். நல்லவேளை, Arms and the Man மங்கலான என் நினைவுகளில் இருந்தமையால் நான் தப்பித்துக்கொண்டேன்.

மின்னஞ்சல் முகவரியும், மொபைல் எண்ணணயும் பறிமாறிக்கொண்டோம். போகிறபோக்கில், ஒரு இலக்கியக்கூட்டதிற்கு என்னை அழைத்தார் (வெறும் கையோடு வராதீர்கள், குறைந்த பட்சம் ஒரு கவிதையோடு வாருங்கள்!). கவிதை வாசிப்பு மற்றும் அதன் appreciation வேறு! கவிதை எழுத நேரமும் இல்லை, moodம் இல்லை. எப்போதோ கல்லூரி நாட்களில் எழுதிய கவிதையொன்று... (திண்ணை இணைய இதழில் 5-6 மாதங்களுக்கு முன்பாக வெளியான கவிதை)...அதையே பிரதி எடுத்து வைத்தேன், கவிச்சோலைக்குக் கொண்டு செல்ல..........ஆனால், வழக்கமான எனது சோம்பேரித்தனம் விளையாடிவிட்டது. வீட்டிலேயே இருந்து பொழுதைக் கழித்துவிட்டேன்.

இன்று காலை, என் மகளை ஸ்கூலிற்கு கொண்டுபோய் விடும் வழியில், பொன்னியம்மன் கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஜேசுராஜை எதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. அவசரஅவசரமாக ஒரு 'Hi' சொல்லிவிட்டு, அவரை கடந்து என் ஹோண்டா ஆக்டிவாவில் பறந்தேன். என் அவசரத்தைப் புரிந்து கொண்டிருப்பாரா...? இல்லை, என் அசிரத்தையை....?


திண்ணை - issue date: Thursday April 27, 2006
இரண்டு கவிதைகள்


காத்திருத்தல்

நீ வரும் பாதையில்
காத்திருந்த காலங்கள்
நீ கடந்து சென்ற பின்னர்
நகரவிடாத பொழுதுகளாய்
மாறி இம்சைதரும் கணங்கள்.
இப்போதெல்லாம் அப்பாதையில்
நீ வருவதில்லை.
நானும் காத்திருப்பதில்லை..
எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.
யாரோ யாருக்காகவோ
காத்திருக்கத்தான் செய்கிறார்கள்
பாதை நெடுகிலும்.
***

நிறுத்தமில்லாப் பயணம்

நீ இருக்கும் பேருந்தில்
இறைச்சல் இம்சைகள் தெரிவதில்லை.
ஆள்கூட்ட நெரிசல்
பழகிப்போயிருக்கும் உனக்கும்.
இருந்தும்,
எல்லாமே தீர்மானிக்கப்பட்ட பொழுதுகளாய்
இறங்கிச்செல்வாய் உன் நிறுத்தம் வந்ததும்.
எப்போதோ நிகழப்போகும்
நம் சந்திப்புகளிற்கு
ஒத்திகை பார்த்துக் கொள்பவனாய் நான்
***

http://www.thinnai.com/?module=displaystory&story_id=30604284&edition_id=20060428&format=html

பின் குறிப்பு - ஒருவரது மொபைல் ரிங்டோன் தேர்வு மூலமே அவர் ரசனன பற்றிய முழு முடிவிற்கு வரலாம் என்று யாராவது சொன்னால் நான் நம்ப மாட்டேன். ஜேசுராஜ் தனது மொபைலில் வைத்திருக்கும் இசை ஒலி - மை நேம் இஸ் பில்லா, வாழ்கை எல்லா, நானும் பாக்காத ஆளில்லே, போகாத ஊரில்லே ஐயா, நல்ல நண்பன், இல்லை என்றால் எங்கு போனாலும் விடமாட்டேன் நானாகத் தொடமாட்டேன் ஐயா.......ஆ.......!

4 Comments:

At 12:00 AM, Blogger Venky said...

That is a fantastic article. Thoroughly enjoyed reading it. It's always great to meet different people. And when we meet knowledgable people, the enjoyment is doubled. Am waiting to meet a lot of such Jesurajs in my life.

BTW, did Meenu read those Kavidhaigal? What was the effect??? :)

 
At 12:21 AM, Blogger Priya said...

கவிதைகள் அருமை..
வெளிநட்டில் நம் ரசனையுடன் ஒத்துப்போகக்கூடிய நண்பர்கள் அமைவது ரொம்ப கஷ்டம், இல்லையா?

 
At 3:02 PM, Blogger Unknown said...

சவூதியில் இருந்தாலும் அருமையான பதிவுகளை உள்வாங்கியுள்ளது "பாரதிய நவீன இளவரசன்" என்றால் அதில் மிகையில்லை.
சவூதி என்றதும் றியாத்தில் பகுதியான வத்தாவில் தடம் பதித்த நினைவுகளும் பேரீச்சைமரத்திலிருந்து பசுமையாகப் பறித்து உண்ட செங்கனிகளும் ஞாபகத்தை புதுப்பிக்கின்றன.

நன்றி.

 
At 3:26 PM, Blogger Unknown said...

அரேபிய மண்ணிலிருந்து இணையம் வழியாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
"பாரதிய நவீன இளவரசன்" காத்திரமாக அமைந்துள்ளதென்றால் அதில் மிகையில்லை.
சவூதியின் றியாத் நகரத்தின் வத்தாவில் தடம் பதித்த நினைவுகளும் பேரீச்சை மரத்திலிருந்து பசுமையாகப் பறித்து உண்ட செங்கனிகளும் மீண்டும் திசை மாற்றுகின்றது.

 

Post a Comment

<< Home