பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Wednesday, October 31, 2007

லா ச ரா



லாசரா என இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமானவரும், 'லாசராவின் சிறுகதைகளைப் படிக்காதவர்கள் சிறுகதைகளைப் பற்றிப் பேசவே அருகதையற்றவர்கள்' என்று எழுத்தாளர் சுஜாதா கூறுமளவிற்கு சுஜாதாவிடமும் பல வாசகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம் அவர்கள் நேற்று மறைந்த செய்தியை சன் தொலைக்காட்சியின் செய்தியோடை மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

இன்று காலை, இணையத்தில் அவரைக் குறித்த மேல் விவரங்களுக்காகத் தேடிய போது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அமைந்த idlyvadai thoughtsintamil மற்றும் thulasidhalam பதிவுகளைக் காண நேர்ந்தது.

கல்லூரி கடைசியாண்டில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார வண்டிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில், எனது வகுப்புத்தோழன் கல்யாணராமன், யார் யாருடைய எழுத்தையெல்லாம் அவசியம் படிக்கவேண்டுமென்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தான். புதுமைபித்தன், கு.ப.ரா., மௌனி, கு, அழகிரிசாமி, நா. பிச்சமூர்த்தி... என நீண்ட அந்தப் பட்டியலில் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் இல்லையே என்றேன். 'நான் சொல்லாவிட்டாலும், நீ அவர்களை எல்லாம் வாசிப்பாயே... அப்புறம்... மிக முக்கியமாய், 'லா.ச.ரா-வைப் படி' என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவன் செல்லவேண்டிய வண்டிவர நானும் விடைபெற்றேன். வீட்டுக்குவந்தபோது ஒரு இனிய ஆச்சர்யமாக அந்த வார குமுதம் அட்டையில் லாசரா இருந்தார். லாசரா அப்படிதான் எனக்கு அறிமுகம். அப்போதெல்லாம், குமுதம் பத்திரிகையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலஸ்தரும் தயாரித்து வழங்குவதுபோல வெளிவரும் குமுதம். அந்தமுறையில், அந்த வாரக் குமுதம் லா.ச.ராவின் கைவண்ணத்தில் வந்தது.

1995 உலகத்தமிழ் மாநாடு சமயத்தில் (அல்லது அதற்கு சற்று முன்னதாகவோ) தமிழில் சிறந்த சிறுகதைகள் என்று மாலன் தொகுத்து வெளியிட்டிருந்த ஒரு சிறுகதைத் தொகுப்பில் 'பாற்கடல்' என்ற லாசராவின் சிறுகதையை முதன் முறையாக வாசித்தேன். திரும்பத் திரும்பப் படிக்க வைத்ததும், ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் வேறு வேறுவிதமான உணர்ச்சிகளைத் தந்ததும் லாசராவின் அற்புதப் படைப்பான 'பாற்கடல்' சிறுகதைதான். நான் வாசித்த சிறுகதைகளிலேயே என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை அதுதான். அந்தத் தாக்கத்திலேததன் நாங்கள் 1996வாக்கில் தஞ்சையில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கைக்கு 'பாற்கடல்' என்று பெயரிட்டிருந்தோம்.

இணையத்தில் 'பாற்கடல்' சிறுகதையினை நான் தேட முற்பட்டபோது கிடைத்த அச்சிறுகதையின் துவக்க வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

கூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் ஜகதா. தலைத்தீபாவளி. ஆனால், கணவனோ அலுவலகவேலை விஷயமாக வெளியூரில். கதை ஆரம்பிக்கிறது - "நமஸ்காரம், ஷேமம். ஷேமத்திற்கு எழுதவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப்பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள்? அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும்? 'அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா? ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கிறாள்!' என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ணலாம்! பண்ணினால் பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலைத்தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே? வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ?.."

"எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே?"


சிறுகதையின் முடிவில் வரும் சில வரிகள்...

"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலியே தான்..." see his natural flow of words... thats his speciality.

***

லாசராவின் மற்றொரு சிறுகதையை சுப்பிரம்மணிய ராஜுவின் நினைவாக மாலன் 'அன்புடன்' என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் கண்டேன். அவள் என்ற அந்தச் சிறுகதையும், மற்றும் இந்தியா டூடேயில் ஒரு 15 வருடத்திற்கு முன்பாக பாப்பு என்ற சிறுகதையும் என்னை அதிகம கவர்ந்த அவரது மற்ற படைப்புகள்.



பாற்கடல், அவள், பாப்பு ஆகிய சிறுகதகள் இணையத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், திண்ணையில் லாசராவின் சில சிறுகதைகள் இருக்கிறது.


***

1996வாக்கில் நான் எனது நண்பன் சாமிநாதன் மற்றும் அவன் சகோதரன் குற்றாலம் சுந்தரராமன் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய 'பாற்கடல்' என்ற எங்களது கையெழுத்துப் பத்திரைகையை லாசராவின் கருத்துக்களைப் பெற லாசராவுக்கு அனுப்பிவைத்தோம். லாசராவின் தீவிர வாசகர்களான அந்த குற்றாலம் சகோதரர்கள் சொல்கிறார்களே என்றுதான் நான் அனுப்பி வைத்தேன். ஆனால், மிகுந்த சிரத்தையுடன் எனக்கு அவர் பதில் எழுதியது என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பதினோரு வருடத்திற்கு முன்பாக எனக்கெழுதிய அந்தக் கடிதத்தில் 'கையெழுத்துப் பத்திரிக்கைகள் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவது உற்சாகத்தில் அல்லது ஆசாபங்கத்தில் (தன் சிருஷ்டிகள் அச்சுக் காணமுடியவில்லையே எனும் ஆதங்கத்தில்)' என்றும் 'உண்மையான எழுத்தார்வமும், சிரத்தையும்தான் கையெழுத்துப் பத்திரிக்கையின் அடிப்படையாயிருத்தல் வேண்டும். எழுத்துப்பத்திரிக்கை ஒரு சோதனைக்கூடம். அச்சுக் கோர்வையில் செய்ய முடியாததைக் கையெழுத்துப் பத்திரிக்கை சாதித்து ஆத்மாவிற்கு திருப்தி ஏற்படவேண்டும்' என்று கையெழுத்துப் பத்திரிக்கை முயற்சி குறித்துச் சொன்ன லாசரா இன்று வலைப்பதிவு முயற்சி பற்றியும் அதைத்தான் சொல்லியிருப்பார்.

***

May his soul rest in peace. My heartfelt condolences to his family and friends.

Tuesday, October 02, 2007

ஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது...




மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி
மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி
மஹாகணபதிம் மனஸா ஸ்மராமி
மஹாகணபதிம்
வசிஸ்ட வாம தேவாதி வந்தித
மஹாகணபதிம்

மஹா தேவ சுதம்
குரு குஹ முதம்
மஹா தேவ சுதம் குரு குஹ முதம்
மார கோடி ப்ரகாஸம் சாந்தம்
மஹா காவ்ய நாடகாதிப்ரியம்
மூஷிக வாஹன மோதகப்ரியம்


Meaning: I meditate on the supreme GaNapati who is worshipped by sages like VasishTha, vaamadEva and others. He is the son of lord Mahadeva, is adored by Guruguha and shines with the brilliance of crores of Cupids. He is the tranquil one and exults in the literary pieces like poems and dramas. He is fond of Modaka (a variety of sweet), and has a mouse for a mount.


***


ஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது...


நேற்று முழுவதும், அதாவது காலையிலிருந்து இரவு வரை, பேருந்தில் போகும்போதும் வரும்போதும், மாலை வாக்கிங் போகும்போதும், சாப்பிட்டு விட்டு வாஷ் பேசினில் கைகழுவும்போதும் மற்றும் அவ்வப்போது கிடடக்கும் gapஇலும், ஒரு திரையிசைப் பாடலின் முதலிரண்டு வரிகளையே திரும்பத் திரும்ப ஹம் பண்ணிக்கொண்டிருந்தேன்... ஏன் என்று எல்லாம் தெரியாது.


சரி, நேற்றோடு முடிந்ததா இந்த சங்கதி? இல்லையே. இன்றும் இதே கதைதான். ஆனால், இன்று காலை என்னையும் அறியாமல் நான் ஹம்மிய பாட்டு 'மஹா கணபதிம்'... 'அட பரவாயில்லையே, பக்திப் பாட்டையெல்லாம் கூட ஹம்
பண்ண ஆரம்பிச்சுட்டான்யா இவன்' என்று யார் கண் வைத்தார்களோ என்னவோ, என் நினைவு எங்கெங்கோ அலை பாயத்தொடங்கியது... 'அலைபாயுதெ கணேசா, என் மனம் அலைபாயுதே'.

'சிந்து பைரவி' படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை இயற்றியவர் முத்துஸ்வாமி தீட்சிதர், ராகம் - நாட்டை, தாளம் - ஆதி என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்தப் பாடலை K.J.ஜேசுதாஸ் பாடும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பக்தி ரசம் சொட்டும் இந்த கீர்த்தனை பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் JKB (அதாங்க, சிவகுமார்) வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அப்படியே மனம் சுஹாசினி, சுலக்ஷணா, ஜனகராஜ், டெல்லி கணேஷ் என்றே போய்... டெல்லி கணேஷ் மாதிரியே தோற்றமளிக்கும் என் பால்ய சிநேகிதனின் தகப்பனாரை என் கண் முன் கொண்டு வந்து வைத்தது.

எப்போதும் வெற்றிலைப் பாக்கோடும், அவ்வப்போது 'குடி'யும் குடுத்தனமுமாக இருக்கும் அவர், ஒரு சமயம் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது (அதுவும், நான் batting பண்ணிக்கொண்டிருக்கும் சமயத்தில்) எங்களிடம் 'ஓசிகாஜ்' அடிப்பதற்காக வந்து நின்றார். நல்ல மப்பில் இருந்தார் என்று நினனக்கிறேன். சரவணன்தான் எங்கள் கேப்டன். அவனுக்கும் இவருக்கும் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட ஆட்டம் அத்தோடு abandoned என்று அறிவிக்கப்பட்டது. அதற்கப்புறம், அவர் அந்த மைதானத்தின் பக்கமே வருவதில்லை. நானும் அவரைப் பார்த்ததாக நினைவில்லை.

ஆனால், ஒரு ஐந்தாறு வருடத்திற்கு முன் மடிப்பாக்கம் கூட்ரோடில் நண்பனொருவனோடு பேசிகொண்டிருக்கும் போதுதான் கேள்விப்பட்டேன்... பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும்போது ரயிலில் அடிபட்டு ஸ்பாட்லயே போயிட்டாராம் டெல்லி கணேஷ் சாயலில் இருந்த அந்த ஆசாமி. இது நடந்து ஒரு பத்து பன்னிரண்டு வருஷம் இருக்கும்டா என்று என் நண்பன் என்னிடம் சொல்லியே ஒரு 5 வருடம் ஆச்சு என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன்...

இப்ப அவர் பையன் என்ன பண்ணிக்கொண்டிருப்பான்? compassionate groundsல் அவனுக்கு அவங்க அப்பா வேலை பார்த்த அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்குமா? அல்லது அவனது சகோதரிக்கு அந்த வேலை கிடைத்திருக்குமா...? இப்போது அவனைத் தொடர்பு கொள்ள ஏதாவது மார்கங்கள் உண்டா? அவனிடம் email கீமெயில் இருக்குமா? அதுசரி, கண்டிப்பா அவனுக்கு email முகவரி இருக்கவேண்டுமென்று அவசியமா என்ன? internet access இல்லாமல் யாருமே இருக்க மாட்டார்களா என்ன... சரி, அவனைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், யாரை அணுகுலாம்...? மின்னஞ்சல் தொடர்பிலுள்ள மற்றி மடிப்பாக்கம்வாசிகளால் அவனை அடையாளம் கண்டுகொள்ளத்தான் முடியுமா? அதுசரி, அவன் மடிப்பாக்கத்தில்தான் இன்னமும் இருக்க வேண்டும் என்று என்ன நிச்சயம்...? எது எப்படியோ... இந்த நினைவுச் சங்கிலியிலிருந்து மீண்டெழுந்து நிகழ்காலத்திற்கு வர நான் பட்ட பிரயாசைகள் இருக்கே.. யப்பா, யப்பப்பா!

இருந்தாலும் அலுவலகம் வந்தவுடன், ஒரு நப்பாசையில், இணையத்தில், orkutல், google தேடுதல் இயந்திரத்தில் தேடோ தேடென்று தேடிப்பார்த்தேன்; அவனது பெயரைப் பல permutations and combinationsசில்
போட்டுப் பார்த்து தேடிப்பார்த்தேன்..ம்.. எல்லாம், மஹாகணபதிக்குத் தான் வெளிச்சம்.

அப்புறம், இன்னொரு விஷயம்.. நேற்று Blog Action Day
என்றும் அது சம்பந்தமாக என்னை ஒரு பதிவுபோட கேட்டிருந்தார் ஒரு நண்பர் (ஏண்டா கேட்டோம் என்று ஆகியிருக்கும் அவருக்கு, இப்போது)... அதனாலேயே, இந்தப் பதிவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமிலை என்று சொல்லிக்கொள்வது என் கடமையாகிறது இல்லையா?... :) அது என்ன 'blog action day'... அதுபற்றி ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதோ உங்கள் பார்வைக்கு.