தோஹா ஆசிய திரைப்படவிழா - நாயின் நிழலிலே
சீரியஸ் சினிமா (கலைப்படம், parallel cinema என்று எல்லாம் இப்போது சொல்லப்படுவதில்லை) ரசிகர்களுக்கு அண்மையில் தோஹாவில் நல்ல தீனி கிடைத்தது. ப்ரவாசி மற்றும் இந்திய தூதரகம் இணைந்து வழங்கிய ஆசிய திரைப்படவிழாவில் நான்கு முறை தங்கத் தாமரை விருது பெற்ற இயக்குனரான கிரீஷ் காசரவல்லி அவர்களின் ‘நாயி நிரலு’ என்ற கன்னடப் படத்தினை நேற்று (23-மார்ச் 2008) காண வாய்த்தது.
அரசாங்கத்தின் ஆதரவு இல்லை; வெகுஜன மக்களின் கவனமும் இல்லை எனலாம். இந்தியாவிற்கு வெளியில், இந்திய சினிமா என்றாலே பாலிவுட் படங்கள்தான் என்றாகி பல வருடங்கள் ஆகிவிட்டது வேதனைக்குரிய விஷயம். ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் இவர்கள் மட்டும்தான் இந்திய சினிமாவின் இலட்சணங்களா? அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாலிவுட்டிற்கு நல்ல சந்தை இருப்பதாகச் செய்திகள் வரும்போது இந்தியன் என்ற ரீதியில் பெருமைப்பட்டாலும், அந்த பாலுவுட் படங்கள் இந்திய சமூகத்தில் நிலவும் யதார்த்தத்தை எள்ளளவும் பிரதிபலிக்காததை கண்டு வருத்தப்படவும்தான் வேண்டியிருக்கிறது.
‘இந்திய சினிமாவைப் பற்றி பேசவேண்டும் என்றால், முதலில் நீங்கள் பாலிவுட்டை மறக்க வேண்டும். அஸ்ஸாமிலோ, மணிப்பூரிலோ, ஒரிசாவிலோ, வங்காளத்திலோ நடைபெருவனவை பாலிவுட் கதைக் களத்தில் இடம்பிடிக்கிறதா என்ன? பிராந்திய மொழிகள்தான் இந்தியாவின் உண்மையான யதார்த்த நிலைகளையும், இந்தியாவின் பன்மைக் கலாச்சாரப் படிமங்களையும் பிரதிபலிக்கின்றன’ என்று கன்னட திரைப்பட இயக்குனர் கிரீஷ் காசரவல்லி நேற்று தோஹா திரையரங்க வளாகத்தில் அவரை சுற்றி நின்று கொண்டிருந்த எங்களிடம் சொன்னது என்னவோ வாஸ்தவம்தான்.
இன்று இந்தியாவில் ஏறத்தாழ வருடத்திற்கு 800 படங்களை எடுக்கிறோம். அதில் ஒரு பத்து பதினைந்து சீரியஸ் படங்கள் தேருமா? அவற்றில் எத்தனை படங்களுக்கு அரசாங்கம் அங்கீகாரம் கொடுத்து ஆதரிக்கிறது? எத்தனை படங்கள் மக்களைப் போய் சேர்கிறது? அப்படியே எடுக்கப் பட்டாலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிட முடிகிறது. சில படங்களுக்கு அந்த வாய்ப்பும் கூட இல்லாமல் போய்விடுகிறது.
***
நாயி நிரலு (Nayi Neralu)
இயக்கம்: கிரிஷ் காசரவல்லி (Girish Kasaravalli)
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியிலுள்ள தென் கர்நாடக கிராமப்புறம், நிலப்பிரபுத்துவ சூழல், பழமைவாத பிராமண சமூக மூடநம்பிக்கைகள், இளம் விதவை, சடங்குகள், சம்பிரதாயங்கள், முடநம்பிக்கைகள், மூன்று தலைமுறையைச் சேர்ந்த பெண் கதாபாத்திரங்கள், பூர்வ ஜென்ம நியாபகங்கள் பற்றிய கருத்து மற்றும் கருத்து-மறுப்பு... இவற்றையெல்லாம் இழைத்து பின்னப்பட்ட டாக்டர் கே.எல். பைரப்பா அவர்களின் நாவலைத் தழுவி கிரீஷ் காசரவல்லி எடுத்த படம் தான் நாயி நிரலு என்ற கன்னடப் படம்.
நாயி நிரலு என்றால் நாயின் நிழலிலே (In the shadow of dog)... படத்தில் நாயும் கிடையாது, நிழலும் கிடையாது. மகாபாரத காவிய இறுதிக்காட்சியில் யுதிஷ்டிரன் நாயுடன் சொர்க்கம் புகுகிறான். யுதிஷ்டிரன் உயிருடன் இருந்த காலகட்டத்தில் செய்த பாவ புண்ணியங்களைத்தான் நாய் அங்கு உருவகப்படுத்துகிறது. இந்த நாயின் நிழலில் படத்திலும், கதாநாயகி வேங்கடலக்ஷ்மியின் நல்லதும், நல்லன அல்லாததுமான காரியங்களாகக் கருதப்படும் செயல்பாடுகளையே படத்தின் தலைப்பு உணர்த்துவதாக எண்ணவேண்டியிருக்கிறது.
வயதான பெரியவர் அச்சனையா மற்றும் அவரது துணைவியார் நாகலட்சுமி, கூடவே விதவை மருமகள் வேங்கடலட்சுமி மற்றும் மைசூரில் மாமன் வீட்டில் தங்கிப்படிக்கும் 20 வயது பேத்தி ராஜலட்சுமி என்ற நால்வர் அடங்கிய ஆச்சாரமான குடும்பத்தில் இதமான தென்றலாக ஐந்தாவதாக நுழைகிறான் புதியவனான இளைஞன் விஷ்வா.
விஷ்வாவிற்கு என்னமோ ராஜலட்சுமி வயசுதான் இருக்கும். இருந்தும், 20 வருடத்திற்கு முன்பு இறந்துபோன மகன் மீண்டும் பிறவி எடுத்து வந்திருக்கிறான் என்று அச்சனைய்யாவை நம்பச் சொல்கிறார் அவர் நண்பர் புட்டாராம். மகனின் மறுபிறவி பற்றி பெரியவர் அச்சனைய்யா நம்பவில்லை. எனினும், ஆர்வம் காட்டாமல் இருக்கமுடியவில்லை அவரால். மனதிற்குள் ஒரு நப்பாசை - ஒருவேளை அந்த புதியவன் தன் மகனாகவே இருக்குமோவென்று. அச்சனைய்யா அந்த இளைஞனிற்கு சில சோதனைகள் வைக்கிறார். பூர்வ ஜென்ம நியாபகங்களை துல்லியமாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நினைவுகூறும் விஷ்வாவினை மகனின் மறுபிறவியாக முழுமனதோடு அச்சனைய்யா ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாகலட்சுமி.யோ, விஷ்வாதான் இறந்து போன தனது மகனின் மறுபிறவி என தீர்க்கமாக நம்புகிறார். அதோடு விதவை மருமகள் வேங்கடலட்சுமியையும் நம்பச்சொல்கிறார். மனைவியின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு விஷ்வாவை வீட்டில் அனுமதித்த பெரியவர் அச்சனைய்யாவிற்கு தர்ம சங்கடமாய் போய்விடுகிறது.
விஷ்வாவின் வரவு நாகலட்சுமியின் வாழ்கையில் நல்ல மாறுதலை ஏற்படுத்துகிறது. ஆரம்பக் காட்சியில் சீக்காளியாக இருந்த நாகலட்சுமி, மகன் வந்த பரபரப்பில் புது தெம்போடு வேலை செய்கிறார். இருபது வருடங்களுக்கு முன்னர் இறந்துபோன மகன் மீண்டும் பிறவி எடுத்து புது அவதாரமாக வந்து இருக்கிறானென்று நாகலட்சுமி, விஷ்வாவிற்கு பிடித்த பதார்த்தங்களையெல்லாம் பண்ணிப்போடுகிறார்.
அச்சனைய்யாவிற்கு மனைவி நாகலட்சுமியிடம் காணப்படும் இந்த மாறுதல் ஒருவிதத்தில் மகிழ்ச்சியைத் தந்தாலும், விஷ்வாவின் வரவு விதவை மருமகளிடமும் மாறுதலை ஏற்படுத்துவதைக் கண்டு சற்று கவலைப்படவே செய்கிறார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விதவையாக இருந்துவரும் வேங்கடலட்சுமிக்கு தன்னைவிட மிகவும் இளையவனான விஷ்வாவை தன் கணவனின் மறுபிறவியாக ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஒரு கட்டத்தில் ஊரில் பலரும் விஷ்வாதான் மறுபிறவி என்று நம்பிவிடுகின்றனர். வேங்கடலட்சுமியும் அவ்வாறு நம்ப வற்புறுத்தப்படுகிறாள். அதுவரை விதவைகளுக்கே விதிக்கப்பட்ட சிகப்புப் புடவையை (தென் கர்நாடக பிராமண வழக்கமோ?!) உடுத்தி வீட்டில் ஓரமாக இருந்த வேங்கடலட்சுமியின் கையில் வண்ணப்புடவையையும், நகைகளையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கிறாள் மாமியார் நாகலட்சுமி - புதிதாக புனர்ஜென்மமெடுத்து வந்த மகனை மகிழ்விக்க சுமங்கலியாக வந்து விஷ்வாமுன் நிற்கும்படி கெஞ்சுகிறாள். மாமியாரின் வற்புறுத்தல் ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாமற்போக விதவைக்கோலத்தைத் தாற்காலிகமாகத் துறக்கிறாள். இருந்தும் விஷ்வாவை மனதளவில் தன் இறந்த கணவனின் மறுபிறப்பாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், புதிய இளைஞன் விஷ்வாவின் கனிவான உபசாரங்களால், வேங்கடலட்சுமி கவரப்படுகிறாள்.
20 வருட விதவை வாழ்க்கையில் வேங்கடலட்சுமிக்கு வாய்த்ததெல்லாம் தரையில் படுக்கை, பத்திய சாப்பாடு, இரவு உபவாசம், அவ்வப்போது சவரம் செய்யப்படவேண்டிய தலை, சிகப்புப் புடவை, வாயில் முணுமுணுக்க ஸ்லோகங்கள் .. அவ்வளவுதான். வேங்கடலட்சுமியின் இந்த வரண்ட வாழ்கையிலும் விஷ்வாவினால் தென்றல் வீசத் துவங்குகிறது. அடுத்த காட்சியிலேயே, எதிர்பாராவிதமாக விஷ்வா மூலமாகத் வேங்கடலட்சுமி கருவுறும்படி சுழல் ஏற்பட குடும்பத்தில் புயல் வீச ஆரம்பிக்கிறது. மறுபிறவியில் துளிகூட நம்பிக்கையில்லாத மகள் ராஜலட்சுமி கோர்ட்டுக்குப்போக விஷ்வா சிறைக்குப்போகிறான்.
பழமையில் ஊறிப்போன மாமியாரும் சரி, மூடநம்பிக்கைகளுக்கு முனைப்புடன் எதிர்ப்புகாட்டும் மகளும் சரி.. இருவருமே தனது உணர்வுகளை புரிந்துகொள்ளாதது கண்டு வேங்கடலட்சுமி மனம் வருந்துகிறாள் - இப்படி முன்று தலைமுறைப் பெண்களை கிரீஷ் காசரவல்லி நம் கண் முன்பாக கொண்டுவந்து ஒரு பிரச்சனையை அணுகும் மூன்று கோணங்களைக் காட்டுகிறார். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அவரவர்கள் நிலையிலிருந்து பார்த்து தங்கள் செயல்களுக்கு நியாயங்கள் கற்பிப்பதைப் பார்க்கமுடிகிறது. இதுதான் சரி என்று பொதுவாக விதி ஒன்றும் கிடையாது என்பதுபோல வேங்கடலட்சுமி பேசுவது யதார்த்தம். அதேசமயம், கற்பு என்னும் ஒழுக்கநிலையும் கேள்விக்குறியாக்கப்படுகிறது. பலகாலம் புதைபட்டுக்கிடந்த உள்ளத்து உணர்வுகள் திடீரென்று பீறிட்டுக் கிளம்ப (அல்லது கிளப்பப்பட) மூடநம்பிக்கையுடன் சமரசம் செய்து தன் இச்சையை தீர்த்துக்கொள்ள நேரிடும் வேங்கடலட்சுமியின் இந்த செயலுக்கு அவளது நெருங்கிய தோழியான காயத்ரியைத் தவிர வேறு யாரும் வெளிப்படையாக ஆதரிக்கவோ நியாயம் கற்பிக்கவோ இல்லை. தன்னால் தான் இந்த நிலை உருவானது என்று எண்ணும் மாமனாரான பெரியவர் அச்சனைய்யா வேங்கடலட்சுமியின் உணர்வுகளைப் புரிந்து மதித்து நடந்துகொள்வது ஆறுதலான விஷயம்.
பழமையில் ஊறிய கிராமப்பெரியவர்களோ, விஷ்வாவை மறுபிறவியாக, அச்சனையா-நாகலட்சுமி தம்பதியினரின் மகனாக அங்கீகரித்தாலும், வேங்கடலட்சுமியின் கணவனாக ஏற்றுக்கொள்ள மட்டும் தயங்குகின்றனர். அதே தயக்கம், பழமையில் தோய்ந்த நாகலட்சுமியிடமும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. விதவை மருமகள் கர்ப்பமாகிவிட்டாள் என்பது தெரிந்தவுடன், நாகலட்சுமி அவளை அறவே வெறுத்து, மீண்டும் விதவைக்கோலம் பூண நிர்பந்திக்கிறாள்.
தன் வயது ஒத்த புதியவனை தனது தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க மறுக்கும் பேத்தி ராஜலட்சுமியோ, ‘மறுபிறவி, பூர்வ ஜென்ம நினைவுகள்’ எல்லாவற்றையும் புருடா என்றும், தனது தாயை ஏமாற்றி, சொத்தை அபகரிக்க விஷ்வா போடும் நாடகம் தான் எல்லாம் என்கிறாள்: தனது தாயின் அன்பு தனக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்ற possessiveness அவளிடம் காணப்பட்டாலும், தனது தாயின் செயல் மூலம் தனக்கு ஒரு புதிய சகோதரி ஸ்தானம் கிடைத்ததை மகிழ்சியுடன் ஏற்றுக்கொள்வது மனதுக்கு இதம் அளிக்கிறது. பூவும் பொட்டுமாய் புதிய வாழ்க்கையைத் துவக்கியிருக்கும் தாயினிடத்து அதே அன்பு பாராட்டும் நவீன பெண்மணியாக வரும் மகள் ராஜலட்சுமிதான் படத்தின் முற்போக்கு அம்சம். தனது தாய்க்கு விஷ்வா மூலமாகப் பிறந்த குழந்தைக்கு விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் காட்சி புதிய தலைமுறையை கவுரவப்படுத்தும் விதமாக உள்ளது.
***
கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் ஓரளவிற்குப் பிரபலமான பவித்ரா லோகேஷ் வேங்கடலட்சுமியாகவும், கிரீஷ் காசரவல்லியின் மகள் அனன்யா காசரவல்லி ராஜலட்சுமியாகவும் வாழ்ந்தே இருக்கிறார்கள் என்று சொல்லலாம். கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாருமே மைய கன்னட வியாபரப் படங்களில் தோன்றுபவர்களல்லர் என்று நண்பர் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.
இந்த விழாவில் கன்னடத் படம் திரையிடுகிறார்கள் என்ற செய்தியை தோஹாவிலும், எனது நிறுவனத்திலும் பணிபுரியும் கன்னட நண்பர்களோடு மின்னஞ்சல் மூலமாகப் பகிர்ந்துகொண்டேனா, இது ‘ஆர்ட்’ படம், ‘அவார்ட்’ படம் என்று சொல்லி ஒருவரும் வரவில்லை!
திரையரங்கினுள் என் இரு நண்பர்களோடு நுழையும்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தது கூட்டம். ஆனால், படம் ஆரம்பிக்கும் சில வினாடிகளுக்கு முன் பார்த்தபோது, அரங்கம் ஏறத்தாழ நிறம்பியிருந்தது கத்தாரிலுள்ள ‘ப்ரவாசி’ என்னும் தன்னார்வ கலாச்சார அமைப்பு எடுத்துக் கொண்டுள்ள முயற்சிக்கு வெற்றி எனலாம்.
படம் முடிந்து வெளியே வந்தபோது, திரையரங்க வளாக வாயிலின் அருகே இயக்குனர் கிரீஷ் காசரவல்லியோடு படம் பற்றிய ஒரு சிறு appreciation நடத்திவிட்டு வீடு திரும்பினோம்.
Link: நாயி நிரலு படத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம் (click to see)
Labels: Doha, திரைப்படம்