யார் இந்தப் புலிகேஸி..? 18ஆம் நூற்றாண்டுகால பின்னணியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் சமகால குறுநில மன்னனா...? அதெல்லாம் தெரியாது. ஆனால் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் பார்க்கப்போகும் முன்புவரை, காமெடியெனைக் கதாநாயகனாகக் கொண்டு வெளிவரும் படம் ரொம்ப அரிதான விஷயமாகப்பட்டாலும், ‘புலிகேசி’ ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்திற்கான உருப்படியான முயற்சியாக இருக்குமென நம்பவில்லை.
இரண்டாண்டு இடைவெளிக்குப் பின் சென்னைக்கு வந்த நான், பார்க்க நேர்ந்த முதல் படம்....புலிகேசி!
ஜெயம் ரவி, த்ரிஷா நடித்த சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் (தமிழக அரசின் புதிய ஆணைப்படி, தமிழில் படத்தலைப்பு வைத்தால் பொழுதுபோக்கு வரி ரத்தாம்!) படம்தான் பார்க்க வேண்டுமென நினைத்தேன். கடைசி நேரமனமாற்றலில், புலிகேசிக்குப் போனோம் நானும் என் தம்பியும். சத்தியமில் டிக்கெட் கிடைக்காததால் தேவியில் பார்த்தோம். படம் வெளியாகிக் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகியும், வாரநாட்களின் அலுவலக நேரங்களிலும், பரவலாகக் கிடைக்கும் VCD/DVDயயும் மீறி இந்தப் படத்திற்குத் தியேட்டரில் கூடுகின்ற கூட்டம் (காலேஜைக் கட் அடித்துவிட்டு வருபவரும் உண்டு) எனக்கு வியப்பாகவே இருந்தது.
இம்சை அரசனாகக் கலக்கல் காமெடியிலும், கத்திச் சண்டை போடும் சீரியஸ் புரட்சிக்காரனாகவும் (டூயட்டும் பாடுகிறார்) இரட்டை வேடத்தில் வடிவேலு ஜமாய்த்துவிட்டார்; அவருடன் அமைச்சராக வரும் இளவரசுவின் காமெடியும் கலக்கல்தான்...சில காட்சிகள் உத்தமபுத்திரன், நாடோடி மன்னன் படங்களை லேசாக ஞாபகப் படுத்தினாலும், அந்தப் படங்களை எல்லாம் நாங்கள் எங்கே பார்த்தோம் எனும் இன்றைய தலைமுறையினருக்கு புலிகேசியின் செந்தமிழ் வசனநடையும், புராணக்கதை சொல்லலும் ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தந்துள்ளதென்னமோ உண்மைதான்.
புலிகேசி ஒரு முழுநீள நகைச்சுவைப் படம்தான்; இருந்தாலும், வாரப் பத்திரிக்கைகளில் வரும் அரசர்-அமைச்சர் துணுக்குகளின் தோரணமாக மட்டுமே இந்தப் படத்தைக் கருதிவிட முடியாது; ரெக்கார்ட் டான்ஸ் கணக்கில் வரும் அந்த இரண்டொரு பாடல்களை நீக்கிவிட்டுப் பார்த்தால், சிம்புதேவன் சொல்லவரும் சில நல்ல விஷயங்களும் புலனாகும்.
பன்னாட்டுக் குளிர்பானப் படையெடுப்பு, குறிப்பாக அதற்கு விளம்பரங்கள் மூலமாகத் துணைபோகும் விளையாட்டு வீரர், நடிகநடிகையர்...போன்ற விஷயங்கள் தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்பட்ட விஷயமாக எனக்குத் தோன்றவில்லை. தவிர, சமூக நலன் அக்கறை கொண்ட பொதுவான கருத்துக்களை வெளியிடும் போது, பிரச்சார தொனி எனும் கறை படியாமல் பார்த்துக்கொண்டதும் மெச்சப்பட வேண்டிய விஷயம். அதனால்தான், அன்பே சிவம், நாகரிகக் கோமாளி படங்களுக்குக் கிடைக்காத வெற்றி இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கிறதோ...? இல்லை...புலிகேசி மீசைதான் வெற்றிக்குக் காரணமோ?
Labels: சினிமா