பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Saturday, April 08, 2006

மூன்று சந்திப்புகள் (Three Meetings)


கடந்த ஒருமாதமாகலமாக, இந்த ஒண்ணரையாண்டாக நிகழாத சில நிகழ்வுகள் எல்லாம் நடந்தன. ஒன்றுமில்லை, அரபு தேசிய வங்கியில் ட்ராஃட் எடுக்கப்போனபோது, ஒரு புதிய தமிழ் நண்பர் கிடைத்தார். பெயர் அருண். கணிபொறித்துறையில் பணி. பாலக்காடுதான் பிறந்த ஊராம். தற்சமயம் வாசம் பொள்ளாச்சியில். என்போன்றே மலையாள சினிமாப் பிரியர் என்று தோன்றியது. ஹாராவில்தான் ஜாகை. சுத்தமான சைவர்; சமைத்துத்தான் சாப்பிடுகிறாராம் (சிகரெட் மட்டும் அப்பப்போ..) மனிதர் செய்த மிகப்பெரிய உபகாரம், என்னை ஒரு கூட்டத்திற்கு அழைத்ததுதான். அது ரியாத் இந்திய யாஹூ குழுமத்தின் சங்கமம். பத்தாவிலுள்ள halfmoon ரெஸ்டாரண்டில்தான் கூட்டம் என்றவுடனேயே, சாப்பாடு உறுதியானது. (நுழைந்தவுடனேயே, 20 ரியாலை வாங்கிவிட்டார்கள் என்பது வேறு விஷயம்).

டாக்டர். மாசிலாமணி அவர்களை முதன்முதலாக அங்குதான் சந்தித்தேன். கேன்ஸர் நோய் குறித்த ஆராய்ச்சியில் பெரிய breakthrough-ஐ ஏற்படுதியவர். தோற்றத்தில் எளிமை, ஆழமான பேச்சு (ஆங்கிலத்தில்தான்), நல்ல ஹாஸ்யம், கலக்கிக்கொண்டேபோனார் டாக்டர். வந்திருந்தவர்கள் பட்டியல் காஷ்மீர்முதல் கன்யாக்குமரிவரை நீண்டு ஒரு இந்திய outlook கொடுத்தாலும், பெரும்பான்மையினோர் கேரளத்தினரே. அப்புறம், மிகமுக்கியமான விஷயம், தேசிய கீதம்...முதன்முறையாக ஜனகனமன...அந்நிய மண்ணில் சேர்ந்து பாடியது!

பின்குறிப்பு: டின்னருக்கு மலையாளத்தில் அத்தாழம் என்கிறார்கள்

இரண்டுவாரத்திற்கு முன்னர், மோகன் அறிமுகமானார். எதேச்சையாக ரியாத் தமிழ் சங்க யாஹூ குழும மடலொன்றின் மூலமாகக்கிட்டிய அவர் பொலைபேசி எண்ணுக்கு அடித்தேன். தனிப்பட்டமுறையில் சில விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம். அப்படியே, கல்யாணைத் தெரியுமா என்று யதார்த்தமாக விசாரித்து வைத்தேன். தெரியுமென்றவர், அவரைப்பற்றிய ஒரு சிறுகுறிப்பே கொடுத்தார். அதைவிட, to my utter surprise, மறுநாள் கல்யாணே என்னைத் தொடர்பு கொண்டார். சாகரன் என்று வலைப்பதிவுகளில் அறியப்படுபவரும், பல மாதங்களாக ரியாதில் நான் அங்கும் இங்கும் தேடிய அதே கல்யாண்! நான் ஏதோ 40-45 வயசுக்காரராக இருப்பாரோ என்று நினைத்திருந்தேன். பார்த்தால் நம்மைவிட இளையவர். தொலைபேசியில் பேசும்போது சூர்யாவின் குரல்மாதிரியே இருந்தது... லக்கி ரெஸ்டாரண்ட் வாசலில் காத்திருப்பதாகச் சொன்னார். Dinner உறுதியென்று எண்ணினேன். ஆனால் அப்போது, சாப்பிடவில்லை, வீட்டிற்கு நேராக அழைத்துச்சென்றார். பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் டச் பண்ணாமல் கொஞ்சம் flash backல் மலர்ந்த நினைவுகளை மட்டும் பறிமாறிக்கொண்டோம். பின்னர், மோகனையும் அழைத்துக்கொண்டு காரில் ஒரு ரவுண்ட் வந்தோம். முக்கியமாக, Al-Hayat ரெஸ்டாரண்டில் ஒரு விருந்தே வைத்தார்.

அடுத்த நாள், வியாழன் மாலை, வளைகுடா மானுட வசந்தம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியொன்றிற்கு அழைத்துச் சென்றார் கல்யாண்.


டாக்டர். கே. வி. எஸ். ஹமீத் முகமது பற்றி அப்போதுதான் கேள்விப்பட்டேன். இஸ்லாம் குறித்த அனைத்துவித கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்னார். இஸ்லாம் பற்றிய தவறான அபிப்ராயத்தைப் போக்கும் விதத்திலும், இஸ்லாமியர்கள் அல்லாதவருக்கு இஸ்லாம் குறித்த இனிய அறிமுகமாகவும் இருந்தது நிகழ்ச்சி..

நிகழ்ச்சி சிறப்பாக அமைய அங்குமிங்கும் ஓடித் தன்னார்வத் தொண்டு புரிந்த முஸ்லிம் இளைஞர்கள், உபசரிப்பு விஷயத்தில் காட்டிய பரிவும், அக்கறையும் பாரட்டுதலுக்குறியது. தவிர, buffet முறை dinner-ல், சைவம் தனியாக, அசைவம் தனியாக எனப்பிரித்து இரண்டு வகைப்படுத்தியது, எனக்கு வசதியாகவும், இனிய ஆச்சரியமாகவும் இருந்தது. அதைவிட இரண்டு புதிய வலைப்பதிவினரையும் கல்யாண் அறிமுகப்படுத்தினார் (நாகை. இளங்கோவன் மற்றும் ராஜா) அவர்களும் கணிப்பொறித்துறையினர்.

விழாமுடிந்து நாகை. இளங்கோவன் தங்கியிருந்த Al Yamama ஹோட்டலுக்குப் போனோம். வரும் சட்டமன்றத்தேர்தல் முடிவுகள் பற்றிய கணிப்புகளுக்காக மனிதர் ரொம்பவே மெனக்கெட்டுள்ளார். 1991 முதல் நடைபெற்றத் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களின் தொகுதிவாரியான முடிவுகள், கட்சிகளின் பலம், பலவீனம், பெற்ற வோட்டுகள் பற்றிய அனைத்தும் உள்ளடங்கிய டேட்டாபேஸ் அவரது லேப்டாப்பில் வைத்திருக்கிறார். ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாகவே விசிட் அடித்தவர்போல் மக்களின் மனநிலையை ஆணித்தரமாகக் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையெனினும், அவரது யோக்கியமான முயற்சி பிரமிக்கவைத்தது. அதைவிட ஷாக்.. . சிலப்பதிகாரம் பற்றிய அவரது நுண்ணிய அறிவு. அதை நிதர்சனமாகக் காணும் வாய்ப்பு நேற்று கிட்டியது.

ரியாத் எழுத்துப்பட்டறையின் கூட்டம் ஒலையாவில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில் சாந்தமான தோற்றத்தோடு விளங்கிய பெரிய ஹாலில் அரங்கேறியது. நானும், நாகை. இளங்கோவனும் சென்றிருந்தோம். எங்களுக்குமுன்பே அங்கு வந்திருந்த கல்யாண் முதலில் வரவேற்றார். டாக்டர் மாசிலாமணியும் அவரது துணைவியாரும், எழுத்தாளருமான விஜயலக்ஷ்மி மாசிலாமணியும் வந்திருந்தனர். அப்பாஸ் ஷாஜஹானும் தம்பதி சமேதமாக வந்திருந்தார். ராஜா (நெஸ்மா இண்டெர்னெட்), ஃபக்ருதீன், லக்கி ஷாஜஹான் மற்றும் வெற்றிவேல் (சவுதி ஃபிரான்ஸி வங்கி) என்று குழுமம் களைக்கட்டத்துவங்க, நாங்கள் வட்டமேஜை மாநாடுபோல (மேஜை மட்டும் கிடையாது) சுற்றியிருந்த நாற்காலியில் காஷுவலாக அமர்ந்து கொண்டோம்.

ஆனந்த விகடனில் வரும் எஸ். ராமகிருஷ்ணனின் கதாவிலாசம் (இந்த வாரம் - எழுத்தாளர் ஆதவன் பற்றியது) வாசிப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. லக்கி. ஷாஜஹான் வாசிக்க, இடையிடையே கருத்துப் பறிமாற்றம் என யதார்த்தமாகவும் சுவையாகவும் சென்றது.

இதனைத் தொடர்ந்து, நாகை. இளங்கோவனின் சிலம்பு மடல். அவர் வாசிக்க வாசிக்க, 2ஆம் நூற்றாண்டு வரலாற்று நிகழ்வுகள் கண்முன்னே காட்சிகளாய் விரிந்தது. நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரமென நம் தலைவன் பாரதி சும்மா சொல்லவில்லை. நாகை. இளங்கோவனின் interpretationsன் நியாயங்கள் எனக்குப் பிடித்தமாதிரி இருந்தது. மன்னனின் சட்டைக்காலரைப் பிடித்துலுக்கும் `தேரா மன்னா...’ பாடலை வாசிக்கும் போது, பள்ளிக்கூட தமிழ் மிஸ்ஸும், யானோ மன்னன், யானே கள்வன் எனப் பாண்டிய மன்னன் வீழும்போது `பூம்புகார்’ சினிமாவும் ஞாபகத்திற்கு வந்தது.

கூட்டம் நிகழ்ந்த இடம் வெற்றிவேல் அவர்கள் வீடு. பொன்னியின் செல்வனில் லயித்துப்போய், ஒரு ஆர்வத்தில் அதில் வரும் அத்தனை ஊர்களுக்கும் (இலங்கையைத் தவிர) போய்வந்தவர். இன்னும் நான் பொன்னியின் செல்வன் பக்கமே போகாதது மீண்டும் உறுத்தியது...

சில விஷயங்கள் இப்படித்தான் ஆகிவிடுகிறது. PAGE 3 படம் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று கடந்த ஒரு வருஷமாகச் சொல்லிக்கொண்டேயிருக்கிறேன்... ம்... பார்ப்போம்..

0 Comments:

Post a Comment

<< Home