பாரதிய நவீன இளவரசன்

yes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.

Thursday, April 13, 2006

சினிமா விமர்சனம்

"சினிமா விமர்சனம் என்பதில் விமர்சகருடைய சொந்த
விருப்பு வெறுப்புகளும் சேர்ந்துதான் இருக்குமா?" சில நாட்களுக்கு முன்னர், இந்தக் கேள்வியை என்னிடம் கல்யாண்தான் கேட்டார் என்று நினைக்கிறேன். இதற்குச் சரியான பதில் எனக்குத் தெரியாது.

ஆனால், சில சமயம், சொந்தக் கருத்துகள், பிரச்சாரநெடிகள், துவேஷங்கள் இவையெல்லாம்கூட விமர்சனத்தில் பொதிந்திருப்பதைப் பார்க்கிறேன். சில சமயங்களில், சில விமர்சனங்கள், அந்தப் படங்களைவிட சுவையாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு வலைப்பதிவில் சுதேசி படத்திற்கான விமர்சனத்தை அதிகம் ரசித்தேன். படம் பார்த்த பாவம், அந்த விமரிசனம் வாசித்ததனால் போனதாகக்கூட எண்ணுகிறேன் (கொஞ்சம் ஓவராகத் தெரிந்தால் மன்னிக்கவும்). விமரிசகர் செய்யும் நக்கலில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. யாம் பெற்ற இன்பம் இவ்வையம் பெற க்ளிக்குங்கள் இங்கே
http://pravunplugged.blogspot.com/2006/03/sudhesi-must-watch.html சுதேசி பார்த்தவர்கள், பாபவிமோசனம் பெற...

நல்ல படங்களைத் தேர்வு செய்து காண்பதற்கு, விமர்சனங்கள் உதவவேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்புதான். ஆனால், விமர்சனங்களுக்காகக் காத்திராமல் படம் பார்க்கப்போவோர் எராளம். அவர்களைத்தான் சினிமா உலகமும் நம்பியிருக்கிறது. ஏற்கனவே திருட்டு VCDயினால் அதிகம் பாதிப்புக்குள்ளான, வியாபாரரீதியாக எடுக்கப்படும் ஜனரஞ்கப் படங்கள், தியேட்டரில் வந்து பார்க்கும் ஜனங்களையே முழுவதுமாக நம்பியிருக்கும் சூழலில், திரைப்படத்துறையினர் எந்த விமிர்சனத்திற்கும் தயாராக இல்லை என்பதுதான் எதார்ததமான உண்மை. அவர்களைப் பொருத்தவரை விமர்சனம் என்பது ஒருவகை விளம்பரமாக மட்டுமே இருக்கவேண்டுமென்று ஏங்குகிறார்கள்.

அதேசமயம், விமரிசனங்களின் மூலமாக தன் அதிமேதாவிலாசத்தையும், கொள்கைச்சார்புகளையும் வெளிக்காட்டும் போக்கும் விமர்சகரிடையே பரவலாக இருக்கத்தான் செய்கிறது. சகட்டுமேனிக்கு, குருட்டாம்போக்கில் அள்ளிவீசும் விமர்சங்களும் உள்ளன. சன் டி.வி. அதைத்தான் செவ்வனே செய்துவருகிறது.

என்னைப் பொருத்தவரை, சீரியஸ் பிக்சருக்கென்று ஒரு விமரிசனம் உண்டு, ஜனரஞ்சகப் படங்களுக்கென ஒரு பாணி விமரிசனம் உண்டு.

இந்தக் கலைப்படங்களும், சீரியஸ் படங்களும் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? கவனச்சிதறல்களுக்கு இடம்தராமல், ஒருவித சிரத்தையோடு படத்தைக் காணும் அணுகுமுறையாகத்தான் இருக்க முடியும். விமர்சகருக்காகவென்றும், கண்டு சர்ச்சிக்க வேண்டுமென்றும் யாரும் படம் எடுப்தில்லை. தத்துவார்த்த ரீதியில், விமரிசனங்கள் இருக்கும்போது, படத்தைவிட விமரிசனத்திற்கே பல விமரிசனங்கள் எழுவதையும் பார்க்கிறேன். அதேபோல, ஒரு ஜனரஞ்கப் படத்தை, அதிசீரியஸ் கண்ணோடு அக்குவேறு ஆணிவேறாக (part by partஆக) புரட்டிப்போட்டு விமரிசனம் செய்ய மெனக்கெடுபவர்களைப் பார்க்கும்போது 'வேற வேலை வெட்டி இல்லையோ' என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்தமாதிரி விமர்சனங்களின் மூலமாகப் படத்தைப் பற்றிய பொதுவான அபிப்ராயம் சொல்லப்படுகிறதோ இல்லையோ, விமர்சகரின் பார்வையும் எண்ணமும் கூடவே அவரது அதிகபிரசங்கித்தனமும்தான் வெளிவருகிறது.

குறைந்தபட்சம், விருப்பு வெருப்பு இல்லாமல் இருக்கும் விமர்சனம் என்றால், என் பால்யப் பிராயம்முதல் நான் நம்புவது The Hinduவையும் ஆனந்த விகடனையும்தான் என்று சொன்னால் மிகையாகாது. மற்றபடி, sify, chennaionline, tamilcinema.com போன்ற வலைத்தளங்களிலும், குமுதம், கல்கியிலும் கூட சில சமயங்களில் நல்ல விமரிசனங்களைக் காணமுடிகிறது. எனக்கென்று சில தனிப்பட்ட அபிப்ராயங்கள் இருந்தாலும், இந்த விமரிசனங்களோடே பொதுவாக ஒத்துப்போதிறேன்.


தவிர, எனது விமர்சனங்கள் எனது அனுபவங்களின் பதிவுகளாகத்தான் கொள்ளவேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அவை என் சொந்த டைரி குறிப்புகள். அவை ஒன்றும் 'தீர்க்கமான முடிவுகளாக' இருக்க வேண்டிய அவசியமும் இல்லை; படத்தின் வெற்றிதோல்வியை நிச்சயிக்கும் சக்திவாய்ந்ததாகவோ இருக்கவேண்டிய நிர்பந்தமும் இல்லை. மேலும் தியேட்டருக்குச் சென்று படம் காண முடியாத இந்த ஊரில், VCDயில் நண்பர்களோடு ஒன்றாகப் படம் பார்க்கும்போது, அந்தச் சூழலின் தன்மைகளும், அவர்கள் அடிக்கும் commentகளும் படம் பார்க்கும் என் கண்ணோட்டத்தைப் பாதிக்காமல் போகாது. என் விமர்சனங்களிலும் இது பிரதிபலிக்கத்தான் செய்யும். விமர்சனம் எழுதுவதற்காகவே டிவி முன்பு, பேனா பேப்பர் சகிதமாக உட்கார்ந்து கொண்டு படம் பார்க்க என்னால் இயலாது.

ஒரு நல்ல புத்தகம், முதல் வாசிப்பில் ஒரு உணர்வையும், மறு வாசிப்பில் வேறு வித உணர்வையும் தருவதைப்போலத்தான் சினிமாவும். இரண்டாவது முறையாகப் பார்க்கும்போது, சில விஷயங்கள் புதிதாகப் படுவது இயல்பான விஷயமானாலும், அப்படத்திற்கு முதலில் நான் எழுதிய விமர்சனம் காலாவதியாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது.

எத்தனைமுறை பார்த்தாலும் அலுக்காத, சட்டென்று இப்பொழுது என் நினைவுக்கு வரும் என் டாப் டென் தமிழ் படங்கள் என்றால் கீழ்க்காணும் படங்களைச் சொல்லலாம். எது நம்பர்-ஒன், நம்பர்-டூ என்று முறையாக வரிசைப்படுத்த இயலாததால், படங்கள் வெளியான காலவரிசையில் (chronological order) தந்துள்ளேன்.

எதிர் நீச்சல்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உதிரிப்பூக்கள்
அழியாத கோலங்கள்
அவள் அப்படித்தான்
முதல் மரியாதை
மௌன ராகம்
நாயகன்
அழகி


டாப் 25 என்றால், அதில் அந்த நாள், கல்யாணப் பரிசு, அபூர்வ ராகங்கள், முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மூன்றாம் பிறை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, மஹாநதி, தவமாய்த் தவமிருந்து... போன்ற படங்களைச் சேர்க்கலாம்.

டாப் 50 என்றால் நெஞ்சில் ஓர் ஆலயம், முகமது-பின்-துக்ளக், அச்சமில்லை அச்சமில்லை, வேளடி கண்மணி, தேவர் மகன், அன்பே சிவம், 7ஜி ரெயின்போ காலனி, காதல், ஆட்டோகிராஃப், பிதாமகன்....என இன்னும் நீளும்...

டாப் 100ல் கமலின் அபூர்வ சகோதரர்கள் மற்றும் விசுவின் சம்சாரம் அது மின்சாரம், பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள்.........எல்லாம் வரலாம்.

Labels:

6 Comments:

At 9:16 AM, Blogger nayanan said...

இளவரசரே,

பதிவுகளை இரசித்தேன். நெஞ்சில் ஓர் ஆலயத்தை
முதல் 50ல் கொண்டு போய் விட்டுட்டீங்களே :)

என்னுடைய உளப்பதிவில் முதல் இடம் பெற்றிருக்கும் அப்படத்திற்கு ஆதரவாகவே இக்கருத்து. (உனக்குப் பிடித்தது எனபதற்காகவெல்லாம் தரவரிசை அளிக்க முடியாது என்று சொல்வது காதில் விழுகிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

 
At 11:36 AM, Blogger KVR said...

test

 
At 5:03 PM, Blogger மீட்டர் முருகேசன் said...

ஏன் சார் உங்க ப்ரொபைல்ல புடிச்சபடங்கள்ன்னா தமிழ்ல

உதிரிப்பூக்கள்
அழியாத கோலங்கள்
நெஞ்சத்தைக் கிள்ளாதே
முள்ளும் மலரும்
மௌன ராகம்
முகமது பின் துக்ளக்

ரேஞ்சுல லிஸ்டு போட்டிருக்கீங்க.

இங்கன பாத்தாக்க

எதிர் நீச்சல்
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்
சில நேரங்களில் சில மனிதர்கள்
உதிரிப்பூக்கள்
அழியாத கோலங்கள்
அவள் அப்படித்தான்
முதல் மரியாதை
மௌன ராகம்
நாயகன்
அழகி

என்கிற மாதிரி லிஸ்டு.

எது கரெக்டுங்க?

 
At 6:06 PM, Blogger Bharateeyamodernprince said...

“சொன்னது நீதானா? சொல்..சொல்..என் உயிரே...” இந்தப் பாடலை மறக்க முடியுமா? தேவிகா, முத்துராமன், கல்யாண்குமார், சிறிது நேரமே வந்தாலும் அந்தக் குட்டி பத்மினியைத்தான் மறக்கமுடியுமா. ஸ்ரீதரின் இந்தப் படம் பல சினிமா ரசிகர்களின் நெஞ்சில் ஒரு காவியமாய் திகழ்வது உண்மை.

முன்பு, தூர்தர்ஷனில் வீட்டில் உள்ளவர்களோடு இப்படத்தை கண்டபோது, என் அப்பா, இந்தப்படத்தை அது வெளிவந்த காலத்தில் பலமுறை தியேட்டரில் சென்று பார்த்ததாக நினைவு கூறுயது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.

இளங்கோவன் அவர்களே, தரவரிசையெல்லாம் ஒரு புறமிருக்கட்டும், இனிய நினைவுகளைத்தட்டி எழுப்பியமைக்கு நன்றி.

முருகேசன் அண்ணே! Profileலில் காணுவதும், பதிவில் காணுவதும் கிட்டத்தட்ட ஒன்றே; இரண்டும் உண்மையே.

Profileல் தரவரிசை ஏதும் தரவில்லை; பொதுவாக எனக்குப் பிடித்தவை இன்னதென சொல்லியிருந்தேன். பதிவில் கொஞ்சம் விஸ்தாரமாகச் சொல்லியிருந்தேன் - டாப் 10, டாப் 25 என, டாப் 50...என வகைப்படுத்தி.

 
At 2:24 AM, Blogger Chandravathanaa said...

சரியாகச் சொன்னீர்கள்.

ஒரு நல்ல புத்தகம் முதல் வாசிப்பில் ஒரு உணர்வையும்இ மறு வாசிப்பில் வேறு வித உணர்வையும் தருவதைப்போலத்தான் சினிமாவும். இரண்டாவது முறையாகப் பார்க்கும்போதுஇ சில விஷயங்கள் புதிதாகப் படுவது இயல்பான விஷயமானாலும்இ அப்படத்திற்கு முதலில் நான் எழுதிய விமர்சனம் காலாவதியாவது தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது...

எதிர்நீச்சல், நாயகன் போன்ற படங்கள் என்னையும் கவர்ந்திருந்தன. நீங்கள் குறிப்பிட்ட மற்றைய படங்களும் பிடித்தவையே!

 
At 5:17 PM, Blogger SurveySan said...

prince,

நெஞ்சில் ஓர் ஆலயம், என் லிஸ்டில் சேர்க்க மறந்த ஒரு fantastic and technically stunning movie.

அந்த மாதிரி touching மூவி அதுக்கப்பறம் வந்ததான்னு தெரியல.

 

Post a Comment

<< Home