கணேசன் எழுதிய கவிதை
எதிர் வீட்டுக் கொடியில்
காய்தலுக்காகக் காத்திருந்தது
நேற்று அவள் தரித்திருந்த
நீல நிற சுரிதார்.
சட்டென நினைவுக்கு வந்தவனாய்
என் வீட்டு மாடிக்கு ஓடினேன்
ஈரம் சொட்டச் சொட்ட இருந்த
என் பாண்ட் பாக்கெட்டினுள்
துழாவியெடுத்தேன்
கணேசன் கொடுத்தக் கடிதத்தை.
கன்னாபின்னாவென கசங்கிப்போயிருந்த காகிதம்
எழுத்துக்களின் கரைதலால் நீலத்திற்கு மாறியிருந்தது
இருந்தும் எனக்கு நிம்மதியைத் தந்தது
அசலான கவிதை என்னுள்
பத்திரமாய் இருப்பது.
****
கவிதைக்கான என் முதல் முயற்சி இதுவே. பிள்ளையார் சுழி போல இருக்கடுமே என்று `கணேசன்' என்று துவங்கினேன்.
எழுதப்பட்டக்காலம் - 1991-92, மீனம்பாக்கம் (சென்னை) ஏ. எம். ஜெயின் கல்லூரியில் மூன்றாமாண்டு கணிதம் பயிலும்போது.
காரணமாய் இருந்தவர்க்கள், கல்லூரி நண்பர்கள் இருவர் - கல்யாணராமன் மற்றும் முத்துக்குமாரசாமி. வாசித்துவிட்டு அவர்கள் சொன்ன கருத்துக்கள் நினைவில்லை. கணையாழிக்காகத்தான் எழுதப்பட்டாலும், அனுப்பவில்லை.
1993-94 வாக்கில், என் கவிதையை வேண்டி, சந்திக்கும்போதெல்லம் மன்றாடிக்கொண்டிருந்தார், தீவிர இலக்கியச் சிற்றிதழ் நடத்திய நண்பர் ஒருவர். பிரசுரத்திற்காக இந்தக்கவிதையைக் கொடுத்தேன். அது வெளிவந்ததோ இல்லையோ, அதன்பிறகு, அவர் கவிதையைப் பற்றி எதுவும் என்னோடு பேசுவதுமில்லை, எந்த நச்சரிப்புகளும் இல்லை.
பின்னர், திருவையாறு பாரதி இயக்கத்தின் ஆண்டு மலரில் வெளியிடுவதற்காக நண்பர் பிரேமசாயி வாங்கிச் சென்றார். வெளியானதாக தெரியவில்லை.
1996ல், தஞ்சாவூரில் சாமிநாதன் மற்றும் அவர் சகோதரர் சுந்தரராமன் துணையுடன் நான் நடத்திய 'பாற்கடல்' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையில்தான் முதன்முதலாக வெளியிட்டேன். அதேவருடம், கல்யாணமானவுடன் பத்திரமாய் மறைக்கவும் தவறவில்லை.
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஜூலை மாத திசைகள் இணைய இதழில் வெளியானது.
http://www.thisaigal.com/july05/poemvenketeshvaradarajanUNI.html
கவிதை இருக்கட்டும் ஒரு புறம்,
அந்த நீலநிற சுரிதாரின் சொந்தக்காரி, அவளை `சைட்' அடிப்பதற்காகவே தினமும் என் வீட்டிற்கு வரும் என் பால்யகால நண்பன், கல்லூரிகால கல்யாண்ராமன், முத்துக்குமாரசாமி, தஞ்சை நண்பர்கள் சாமிநாதன், சுந்தரராமன், திருவையாறு பிரேமசாயி, இவர்களெல்லோரும்தான் மனதில் இப்போது flash ஆகிறார்கள்...
2 Comments:
நல்ல ஒரு கவிதை பாரதி,
கவிதையை மனனம் செய்ததாகப்போட்டீரே? கவிதை எங்கெ? ;) இன்னும் எழுத வாழ்த்துக்கள், என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும் நன்றிகள் பல..
ஸ்ரீஷிவ்..
வாழ்த்துக்கள் வெங்கடேஷ் வரதராஜன்
எங்கே உங்கள் மற்றைய கவிதைகள்?
இங்கே பதியுங்களேன். பார்க்க ஆவல்.
Post a Comment
<< Home